இயற்கை வேளாண்மை முறையில் பயிர் சாகுபடியை மேற்கொள்வதன் மூலம் சாகுபடி செலவு குறைகிறது. மேலும் அதிக மகசூல் பெறுவதுடன் மண்ணின் வளமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் மண்ணின் இயற்பியல் மற்றும் உயிரியல் காரணிகள்பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
இயற்கை வேளாண்மையில் கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்வதன் மூலம் பயிர் மகசூல் அதிகரிக்கிறது. களைச்செடிகளின் எண்ணிக்கை
கட்டுபடுத்தப்படுகிறது.
ஊடு பயிர் மூலம் ஒரே பயிரை வளர்க்காமல் பல்வேறு பயிர்கள் பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.
இத்தகைய பயிர்கள் கவர்ச்சிப் பயிர்களாகவும் பயன்படுகின்றன. இவை பூச்சிகளைக் கவர்ந்து முக்கிய பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றன.
மேலும் இவற்றின் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்தி பயிர்களுக்கு ஊட்டம் அளிக்கின்றன. அதனால் மண்ணின் வளமும் மேம்படுகின்றன.
நெல் வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில்தட்டை பயறு விதைக்க வேண்டும். இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும். இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை
தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்துகின்றன.
நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோடீனியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.
நிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் சுருள்பூச்சி, இலைப்பேன் மற்றும் அந்துபூச்சியின்
சேதத்தை கட்டுப்படுத்தலாம்.