கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை – மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு

Forums Inmathi News கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை – மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8585
  Inmathi Staff
  Moderator

  கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை – மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு

  வயது முதிர்வு மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 வருடங்களாக ஓய்வில் இருக்கிறார். அவரது தொண்டையில் ட்ரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டிருப்பதால் பேச முடியாத நிலையில் அவர் இருக்கிறார். அவ்வப்போது, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அவர் வந்து சென்றார்.  கடந்த 18-ம் தேதி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில் பழைய குழாய் அகற்றப்பட்டு 4-வது முறையாக அவருக்கு புதிய குழாய் பொருத்தப்பட்டது.

  இந்தநிலையில், கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டது.  கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வந்தனர்.  திமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

  கடந்த 24-ந் தேதி அவருக்கு சளித்தொந்தரவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கும் கடுமையாக சிரமப்பட்டார். இதனால், காவேரி மருத்துவமனையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் கருணாநிதிக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தனர். அதற்காக மருத்துவமனையில் இருந்து சில மருத்துவ உபகரணங்களும் கொண்டுவரப்பட்டன.

  சக்கர நாற்காலியில் கருணாநிதியால் உட்கார முடியவில்லை. இதனால், கட்டிலில் அவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் நேற்று அவரது கை நரம்பு வழியாக சில மருந்துகளை செலுத்தியுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் யாரையும் பகல் நேரத்தில் அவரை பார்க்க டாக்டர்கள் அனுமதிக்கவில்லை.

  ஆனால், நேற்று மாலையில் ஒவ்வொருவராக சென்று கருணாநிதியை பார்க்க டாக்டர்கள் அனுமதித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கோபாலபுரம் இல்லத்திலேயே இருந்தார்.

  துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அமைச்சர்கள் நேற்று இரவு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து அறிந்தார். மதுரையில்  மு.க.அழகிரியும் சென்னை வந்தார்.

  இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு  இன்று காலை 4 டாக்டர்கள் கொண்ட காவேரி மருத்துவமனை மருத்துவக்குழு  வருகை தந்து உள்ளனர். இந்த குழுவினர், கருணாநிதியின் உடல்நிலையை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இதற்கிடையே, கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல் வெளியானதால், அவரது கோபாலபுரம் இல்லம் உள்ள பகுதியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். வீட்டைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என அரசியல் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This