கோபாலபுரத்தில் குவியும் தி.மு.க. தொண்டர்கள்…
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். வயோதிகம் காரணமாக அவர் உடல் நலம் நலிந்து உள்ளதாகவும், சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அறிந்த தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தின் முன் நள்ளிரவிலும் குவிந்தனர். அவர்கள் கருணாநிதி வாழ்க என கோஷமிட்டனர். நள்ளிரவில் கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலையில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் கோபாலபுரம் வந்த வன்னம் உள்ளனர். அவர்களை காவல்துறையினர் கட்டுப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர். தொண்டர்கள் ஏராளமானோர் வருவதால் கோபாலபுரம் சுற்றி உள்ள சாலைகள் அனைத்தும் தடுப்புகள் வைத்து தடுக்கப்பட்டுள்ளன. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுளளனர்.