ஓகி புயலில் மீண்டு வந்த மீன வாரணம் வழங்க வேண்டும் என கேட்டு தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் தெற்கு எழுத்தாளர் இயக்க நிர்வாகி திருத்தமிழ்தேவனார், சமூக ஆர்வலர் ஜெயசுந்தரம், சமம் குடிமக்கள் இயக்க மாவட்ட பொருளாளர் கடிகை ஆன்றனி ஆகியோர் பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: குமரி மாவட்டம் தூத்தூர், குளச்சல், முட்டம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் 10 முதல் 40 நாட்களும், நாட்டு படகுகளில் 2 முதல் 7 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கின்றனர். கடந்த நவம்பர் 29ம் தேதி ஓகி புயல் தாக்கும் என அன்று மாலை அரசு அறிவித்தது. ஆனால் ஏற்கனவே சில நாட்களுக்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு இந்த செய்தி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் திடீரென ஓகி புயல் ஆழ்கடலில் இருந்த மீனவர்களை தாக்கியது. இதில் 29 விசை படகுகளும் நூற்றுக்கணக்கான நாட்டு படகுகளும் கடலில் மூழ்கின. குமரியில் 161 மீனவர்களும், தூத்துக்குடி, நாகப்பட்டிணம் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மீனவர்களும் கடலில் மூழ்கி இறந்தனர். மீட்கப்பட்ட பெரும்பாலான மீனவர்கள் 2 முதல் 4 நாட்கள் வரை உணவு, தண்ணீரின்றி கடலில் தத்தளித்தனர்.
மீட்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்து 7 மாதம் ஆகியும் இதுவரை நிவாரண தொகை வழங்கவில்லை. நீரோடியை சேர்ந்த மீனவர் சேவியர் 3 நாட்களுக்கு பின்னர் சீன கப்பல் உதவியுடன் மீட்கப்பட்டார். அவரது கை கால் அழுகி ஊனமுற்றவராக கைவிடப்பட்டுள்ளார். இதுபோல் இரவிபுத்தன்துறையை சேர்ந்த இரு மீனவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களுடன் சென்ற 7 மீனவர்கள் இறந்துவிட்டனர். பல மணி நேரம் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இவர்கள் கடல் நீரை குடித்துள்ளனர். இப்போது இவர்கள் தொடர் மருத்துவ சிகிச்சைக்கு உதவி இன்றி சிரமப்படுகின்றனர். இதனை போன்று பல மீனவர்கள் உடலும், உள்ளமும் பலகீனமடைந்து மீண்டும் கடல் தொழிலுக்கு செல்ல இயலாத நிலையில் உள்ளனர். எனவே அரசு புயலில் மீண்டு வந்த மீனவர்களுக்கு உறுதி அளித்த ரூ.50 ஆயிரம் உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் ஆழ்கடலில் சிக்கி மீட்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கும் அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.