உரச் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்

Forums Communities Farmers உரச் செலவை குறைக்கும் உயிர் உரங்கள்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8516
  Inmathi Staff
  Moderator

   

  இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலம் இடுபொருளுக்கு ஆகும் செலவைக் குறைத்து மண் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம்.
  அனைத்து தாவரங்களுக்கும் தழைச்சத்து இன்றியமையாதது. நைட்ரஜன் எனப்படும் தழைச்சத்தில் இருந்துதான் தாவரங்களில் உள்ள புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, தழைச்சத்தை பெறுவதற்கு நுண்ணுயிர் அடங்கிய உரங்களையோ அல்லது நுண்ணுயிரோடு இயைந்து வாழும் உயிரினங்களையோ உரமாக இட்டு சாகுபடி செலவைக் குறைக்கலாம்.
  மணிச்சத்தை மண்ணில் இருந்து செடிகளுக்கு கிடைக்குமாறு செயல்படும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் வேர் உட்பூசணங்களும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  ரைசோபியம்:
  உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைத் தாவரங்கள், நிலக்கடலை போன்ற பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை ‘ரைசோபியட்’ என்னும் பாக்டீரியாவின் துணை கொண்டு செடிகளில் சேர்க்கின்றன. பயறு வகை பயிர்களின் விதையுடன் ரைசோபியம் உயிர் உரங்களை கலந்து விதைத்தால் வேர் முடிச்சுகள் அதிகரித்து அதிக தழைச்சத்து நிலைநிறுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கிறது.
  சாதாரணமாக 20 கிலோ விதைகளுக்கு 200 கிராம் ரைசோபியத்தை சோற்றுக்கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து ஒரு நாள் கழித்து விதைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கிறது. மேலும் 3-ல் ஒரு பங்கு உரத் தேவையும் குறைகிறது.
  அசோஸ்பைரில்லம்:
  அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிர் பாக்டீரியா நெல், மக்காச்சோளம், கம்பு, பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களின் வேர்ப்பகுதிகளில் வளர்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. இதை பயன்படுத்தும்போது ஏக்கருக்கு 10 கிலோ வரை தழைச்சத்து (22 கிலோ யூரியா அளவு) சேர்க்கப்படுகிறது. மேலும் ஜிப்பர்லிக் அமிலம், இன்டோல் அசிட்டிக் அமிலம் போன்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளையும் அசோஸ்பைரில்லம் உற்பத்தி செய்வதால் பயிர் நன்கு வளர்ந்து விளைச்சல் அதிகமாகிறது. இதை விதை நேர்த்தி செய்தும், நாற்றின் வேர்ப்பாகத்தில் நனைத்தும் மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட்டும் பல வகைகளில் பயன்படுத்தலாம்.
  பாஸ்போ பாக்டீரியா:
  இது மண்ணில் உள்ள மணிச் சத்தை கரைத்து பயிர்களுக்கு வழங்குகிறது. சிலவகை அமிலங்களை இந்த பாக்டீரியா உற்பத்தி செய்து மண்ணிலுள்ள கரையாத பாஸ்பேட்டை கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது. இதை பயன்படுத்துவதால் 20 சதவீதம் மணிச்சத்து தரும் ரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம். வேர்கள் செழித்து வளரவும், திசுக்கள் வளம் பெற்று கதிர்கள் செழித்து வளரவும், தழைச்சத்தை அதிக அளவு ஈர்க்கவும் பாஸ்போ பாக்டீரியாபயன்படுகிறது.

  அசோலா:
  அசோலா ஒரு பெரணி வகைத் தாவரம் ஆகும். இதில் உள்ள அனபீனா எனப்படும் நுண்ணுயிர், காற்றில் உள்ள தழைச் சத்தை நிலைப்படுத்தி உரமாக அளிக்கிறது. இந்த அசோலாவை நாற்றங்கால்களில் இட்டு உற்பத்தி செய்து ஒவ்வொரு வாரமும் அறுவடை செய்யலாம்.
  ஏக்கருக்கு 100 முதல் 250 கிலோ அசோலாவை நெல் நடவு வயலில் பரப்பி விட்டு ஒரு வாரம் தண்ணீர் தேக்கிவைத்து, பின் சேற்றில் மிதித்து விட வேண்டும். இதில் 6 சதவீதம் தழைச்சத்து உள்ளது. வேகமான வளர்ச்சியும், அதிக தழைச்சத்தும் இதன் சிறப்பம்சங்களாகும். ஒரு வாரத்தில் 10 மடங்கு இது பெருகுகிறது. இதன் மூலம் 25 சதவீதம் ரசாயன தழைச்சத்து உரங்களை குறைக்கலாம்.

  நீலப்பச்சை பாசி:
  இதில் உள்ள நைட்ரஜேனஸ் என்ற பொருள் வெளியில் உள்ள நைட்ரஜன் வாயுவை தழைச்சத்து உரமாக ஆக்குகிறது. இந்த வகை பாசியை உழவர்கள் தமது நிலங்களில் நாற்றாங்கால் அமைத்து, விதைத்து 15 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
  தொடர்ந்து 4 பருவங்களுக்கு இந்த பாசியை வயலில் இட்டால் தானாக வளர்ந்து பெருகத் தொடங்கி விடும். இதன் மூலம் 25 சதவீதம் ரசாயன உரத்தை சேமிக்கலாம். அதில் தழைச்சத்து மட்டுமின்றி அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவையும் உள்ளன. மேலும் மணிச் சத்தை கரையச் செய்து நெற்பயிருக்கு அளிக்கிறது.
  உயிர் உரங்கள் விநியோகம்:
  உழவர்கள் இந்த உயிர் உரங்களை பரிந்துரைகளின்படி பயன்படுத்தினால் தழை, மணி போன்ற சத்துகள் கொண்ட ரசாயன உரங்களின் தேவையை குறைத்து அதிக மகசூல் பெறலாம். அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இந்த வகை உயிர் உரங்கள் அந்தந்த சாகுபடி பயிர்களின் தேவைக்கேற்ப இருப்பு வைத்து விநியோகிக்கப்படுகிறது.

  சிலவகை உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
  உங்கள் அருகில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This