Forums › Communities › Farmers › மண் பரிசோதனைக்கு மண் எடுக்கும் முறை!
- This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 5 months ago by
Inmathi Staff.
-
AuthorPosts
-
July 24, 2018 at 5:54 pm #8353
Inmathi Staff
Moderatorவிவசாயம் செழிக்கவும், மகசூல் அதிகரிக்கவும், மண்வளத்தை காக்கவும், விவசாயிகள் கண்டிப்பாக மண் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயத்துக்கு அடிப்படைத் தேவைகளாக நிலவளம், நீர்வளம் அமைகின்றன. நிலத்தின் வளத்தை நிர்ணயிப்பதில் மண் பரிசோதனையே முக்கியமானதாகும். ஏன் என்றால் மண்ணின் ரசாயன குணங்களும், பயிருக்குக் கிடைக்கக் கூடிய சத்துக்களின் அளவையும் மண் பரிசோதனையின் மூலமாகவே அறிய முடியும். வயலுக்கு வயல் சத்துக்களின் அளவு வேறுபடுவதாலும், மண் பரிசோதனையின் மூலமே பயிருக்கு ஏற்ப சமச்சீர் உரத்தை பரிந்துரை செய்ய முடியும்.
மேலும் இவ்வகையில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதோடு அதிகப்படியான உரச்செலவையும் குறைக்கலாம்.
பரிசோதனையின் அவசியம்: மண்ணின் தன்மைகளைக் கண்டறிய, களர், உவர் மற்றும் அமில நிலங்களைக் கண்டறிந்து அவற்றை சீர்திருத்தவும், பயிருக்குக் கிடைக்ககூடிய சத்துக்களின் அளவை அறிந்து அதற்கேற்ப உரமிடவும் ஆகும்.
மண் மாதிரி எடுக்கும் குறியீடு: நிலத்தின் தன்மைக்கு ஏற்ப மணற்பாங்கான பகுதி கரிசல் மண் பகுதி, செம்மண் பகுதி ஆகியவற்றுக்கு மண் மாதிரியை தனித்தனியாக எடுக்க வேண்டும்.
வயலின் மேடான பகுதிக்கு தனியாகவும், தாழ்வானப் பகுதிக்கு தனியாகவும் மண்மாதிரி எடுக்க வேண்டும். ஒரே வயலின் முன்பு சாகுபடி செய்த பயிர், வேறுவேறாக இருந்தாலும், அதற்கேற்ப, தனித்தனியாக மண் மாதிரிகள் எடுக்க வேண்டும்.
மண் மாதிரி எடுக்கும் காலம்: பயிர் அறுவடை முடிந்த பின்னர், நிலத்தை அடுத்த பயிருக்கு தயார் செய்வதற்கு முன்பு, தற்போதுள்ள பயிருக்கு உரமிட்ட 3 மாதங்களுக்கு பிறகும் மாதிரி எடுக்கலாம்.
மண் மாதிரி எடுக்கத் தேவையான கருவிகள்: மண்வெட்டி, தட்டு அல்லது வாளி, துணிப்பை அல்லது பாலித்தீன் பை.
மண் மாதிரி எடுக்கும்போது தவிர்க்க வேண்டிய இடங்கள்: எரு குவித்த இடங்கள், வரப்பு ஓரங்கள், மரங்கள் நிழல் படரும் பகுதிகள், நீர் கசிவு உள்ள இடங்கள்.
மண் மாதிரி எடுக்கும் ஆழம்: நெல், ராகி, கம்பு, கடலை, போன்ற குட்டை வேர் பயிர்கள்: 15 செமீ அல்லது 6 அங்குலம்.
பருத்தி,கரும்பு, மிளகாய், மரவள்ளி போன்ற ஆழமான வேர் பயிர்கள்: 22.5 செமீ அல்லது 9 அங்குலம்.
திராட்சை, மா, எலுமிச்சை, போன்ற பழத்தோட்ட மற்றும் தென்னை மரப்பயிர்கள்: 3 அடி ஆழத்துக்கு குழித் தோண்டி அதில் முதல் அடியில் ஒரு மாதிரியும், 2-வது அடியில் ஒரு மாதிரியும், 3-வது அடியில் ஒரு மாதிரியும் என 3 மண் மாதிரிகளை தனித்தனியாக எடுக்க வேண்டும்.
மண் மாதிரி எடுக்கும் முறை: மண் மாதிரி எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள இலை, சருகு, புல் முதலியவற்றை மேல் மண்ணை நீக்காமல் அப்புறப்படுத்த வேண்டும். சாகுபடி செய்யும் பயிரைப் பொறுத்து மேற்கூறிய ஆழத்துக்கு நிலத்தில் “வி’ வடிவத்தில் (மண்வெட்டியால்) குழிவெட்டி அந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டும்.
வெட்டிய “வி’ வடிவ குழியின் ஓரமாக குழியின் மேலிருந்து கீழாக இரண்டு புறமும், ஓரே சீராக மண்வெட்டியால் ஒரு அங்குல கணத்துக்கு மண்ணை வெட்டி எடுத்து சுத்தமான வாளியில் போட வேண்டும்.ஒரு வயலில் இதே போன்று குறைந்தது 10 அல்லது 15 இடங்களில் மண்ணை சேகரித்து ஒன்றாகக் கலந்து அதில் இருந்து அரை கிலோ மண்ணைப் பகுத்தல் முறையில் எடுத்து துணிப்பையில் இட்டு பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.