விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் போதிய அளவு இருக்குகிறது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

Forums Communities Farmers விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் போதிய அளவு இருக்குகிறது அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #8350
  Inmathi Staff
  Moderator

  விவசாயிகளுக்கு தேவையான உரம், விதைகள் போதிய அளவுக்கு கையிருப்பு உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

  ஆய்வு கூட்டம்

  முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க, கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவாது:-

  பயிர்க்கடன்

  விவசாயிகளின் மேம்பாடு மற்றும் நலனில் அக்கறைகொண்டு டெல்டா மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு ரூ.115 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான குறுவை தொகுப்புத் திட்டத்தினை அறிவித்துள்ளார். கடந்த 19-ந் தேதி விவசாய பெருங்குடி மக்கள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

  இந்த ஆண்டு, மழைபொழிவு அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, சாகுபடிக்கு அதிக அளவிலான பரப்பினை கொண்டுவரவேண்டும் என்ற நோக்கத்துடன் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும், பயிர்கடன் குறியீடாக ரூ.8000 கோடி  நிர்ணயிக்கப்பட்டு, 15.07.2018 வரை 1,43,094 நபர்களுக்கு ரூ.955.35 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

  உற்பத்தி

  டெல்டா பகுதிகளில், பயிர்கடன் குறியீடாக 2018-19 -ம் ஆண்டிற்கு ரூ.1,028.65 கோடி நிர்ணயிக்கப்பட்ட போதிலும் தாராளமாக பயிர்கடன் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும், தங்குதடையின்றி, உரம் கிடைக்கும் பொருட்டு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும், டான்பெட் மண்டல அலுவலகங்களிலும், 1,25,255 மெ.டன் அனைத்து வகையான உரங்கள் மற்றும், 5000 மெ.டன். நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

  இத்தருணத்தில், தமிழக அரசு, விவசாயிகள்,  வாழ்வில் வளர்ச்சி காண ஏதுவாகவும், இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும், இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு இலாபம் என்ற கொள்கைப்படி, 2011 முதல் 15.07.2018 வரை 70,64,323 விவசாயிகளுக்கு ரூ. 34,617.84 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

  பைப்பு தொகை

  மேலும், 30.6.2018 வரை வங்கி வாடிக்கையாளர்களுக்கும், பயிர்கடன் பெறும் விவசாயிகளுக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்கும் வகையில், முறையே 1,99,051 ருபே டெபிட் கார்டுகளும் (பற்று அட்டைகள்), 3,08,158 ருபே கிசான் கார்டுகளும் (விவசாய கடன் அட்டைகள்) வழங்கப்பட்டுள்ளது.

  அரசு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் பொருட்டு, எடுத்த சீரிய நடவடிக்கைகளின் காரணமாக, மாநிலத்தில் உள்ள 4,462 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில், 30.06.2018 அன்று ரூ.6,658.69 கோடி அளவிற்கு வைப்புத்தொகைகள் நிலுவையாக உள்ளன.

  கிடங்குகள்

  மாநிலத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு அமைப்புகளிலும் 30.06.2018 அன்று ரூ.51,808.37 கோடி அளவிற்கு வைப்புத்தொகைகள் நிலுவையாக உள்ளன.

  சிறு, குறு விவசாயிகளின் விளைபொருட்களைப் பாதுகாத்து, நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் விற்பனை செயவ்தற்கு ஏதுவாக கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 489.63 கோடி செலவில் 5,10,600 மெ.டன் கொள்ளளவு கொண்ட 3,879 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளது.

  தடையின்றி…

  தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்படும் 23,341 முழுநேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 9,541 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 32,882 நியாயவிலைக் கடைகள் மூலம் 1,80,42,457 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  மேலும், கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எவ்வித தங்கு தடையுமின்றி வழங்குவதற்கு கூட்டுறவுத்துறையின் அலுவலர்கள், கள அலுவலர்கள் நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டின்படி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தவறு செய்யும் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை உடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

  மருந்துகள்

  பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 3 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் உட்பட 75 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 19.07.2018 வரை 36,257 மெ.டன் காய்கறிகள் ரூ. 105.62  கோடிக்கு விற்பனை  செய்யப்பட்டுள்ளது.

  மேலும், அனைத்து தரப்பு மக்களும் 20 ரூ வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை பெற்று பயனடையும் வகையில் 111 அம்மா மருந்தகங்கள் மற்றும் 170 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 30.06.2018 வரை ரூ. 700  கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

  மேலும், ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், கூட்டுறவு அமைப்புகளால் நடத்தப்படும் அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு ரூ. 40 வரை தள்ளுபடி வழங்கப்படும்.

  வேலை நிறுத்தம்

  தற்போது நடைபெற்று வரும் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தின் பாதிப்பிலிருந்து பொதுமக்களை காத்திடும் பொருட்டு, முதல்-அமைச்சர்  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தேவைக்கு ஏற்ப காய்கறிகள் கிடைக்காத சூழ்நிலையில், விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காத்திடும் பொருட்டு, தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏதுவாக விலை நிலை நிறுத்தும் நிதியிலிருந்து ரூ.5 கோடியினை விடுவித்து ஆணையிட்டுள்ளார்.

  மேலும், நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி பொதுமக்களுக்கு கிடைத்திட, நகர்வுப் பணியினை மேற்கொள்வது குறித்து, துறை அலுவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

   

   

   

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This