ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த மீனவர் எடிசன் என்பவர் வீட்டுத் தோட்டத்தில் கடந்த ஜூன் 25 அன்று கழிவு நீர் கால்வாய் கிணறு அமைப்பதற்காக தொழிலாளர்களைக் கொண்டு தோண்டியபோது பெருமளவில் ஆயுதக் குவியல் கண்டெடுக்கப்பட்டது. இவை இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது போராளிக் குழுவினரால் புதைக்கப்பட்டதாக இருக்கக் கூடும் என தெரிகிறது.
இந்த ஆயுதக் குவியல்களை அப்புறப்படுத்தில் போலீஸார் செயலிழக்க செய்யாததால், வீட்டின் உடைமையாளரான எடிசன் கடந்த சில நாள்களுக்கு முன்னர், வீட்டை காலி செய்து விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி, ராமேசுவரம் நீதித்துறை நடுவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக்குவியல்களை வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸார், அகற்றி சிவகங்கை மாவட்டம் மேலூரில் உள்ள ஆயுதக் கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.