ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 21 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவாராஜை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், குமரி மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த மீனவர்கள் 21 பேர், ஈரானில் அவர்களை வேலைக்கு அமர்த்திய நபரால் சம்பளம் கொடுக்கப்படாமல், நடுத்தெருவில் விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரம் தொடர்பாக தலையிடுமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரச்சினையை சுமூகமாக தீர்க்க மீனவர்களை அனுப்பிய முகவர்கள் முயன்றனர். இந்நிலையில் நேற்று வெளியுறவு அமைச்சரை சந்தித்த கனிமொழி, மீனவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரக் கோரினார். அதனை உடனடியாக செய்வதாக, அமைச்சரும் உறுதியளித்தார்.