கடந்த ஒருவாரமாக கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் மிக அதிக அளவிலான நீர் திறந்துவிடப்படுவதால் மீன் பிடிக்க முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் கடந்த ஒரு வாரமாக கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் ஸ்டான்லி நீர்த்தேக்கம் மற்றும் காவிரி ஆற்றின் கரை ஓர கிராமங்களான செட்டிப்பட்டி, பன்னவாடி, கோட்டையூர், சேத்துக்குளி, மாசிலாபாளையம் ஆகிய பகுதிகளில் அப்பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய உள்நாட்டு மீனவர்கள் 20 ஆயிரம் பேர் மீன் பிடி உரிமம் பெற்றுத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதி மீனவர்கள், கடந்த ஆறு மாதமாக மேட்டூர் அணை நீரின்றி வறண்டு கிடந்ததால் அறவே மீன் இல்லாமல் போய், வயிற்றுப் பிழைப்பிற்காக மீன் கிடைக்காமல் வேறு கூலி வேலைத் தேடி பிற பகுதிகளில் சென்றுவிட்டனர்.
தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி, நல்ல மழை பெய்து வருவதால் மீண்டும் தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தொழிலை செய்யலாம் எனக் கருதி காவிரியாற்றின் கரையில் குடிசைகளைப் போட்டு வலைகளை தயார் செய்து காத்திருந்தனர்.
ஆனால், கர்னாடக அணைகளிலிருந்து வரும் அதிகப்படியான நீர் வரத்தால் எதிர்பார்த்தபடி அவர்களால் மீன் பிடிக்க இயலவில்லை. இதனால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். நீர் வரத்து காரணமாக அணையில் நீர் தழும்பி வழியும் காட்சியையும், சுவையான புத்தம் புதிய நல்ல நீரில் வளர்ந்த மீனை சுவைக்கலாம் எனவும் மேட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா வந்த பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.