மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் குறுவை பயிருக்கு நீர் திறந்துவிடப்படும் என டெல்டா பகுதி விவசாயிகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளனர்.
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையின் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட பெரிய அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அதன்னைத் தொடர்ந்து கர்நாடக அரசு, காவிரியில் நீரைத் திறந்துவிட்டது. இதனால் கடந்த வாரம் 70அடி அளவுக்கு மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிரம்பியது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் ஒரு லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 95 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டினால், வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி குறுவைக்கு நீர் திறந்துவிடப்படும். ஆனால் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் நீர் நிரம்பாத காரணத்தால் அணையில் இருந்து குறுவைக்கு 7ஆவது ஆண்டாக நீர் திறந்துவிடப்படவில்லை. தற்போது அணையில் 95 அடிக்கு நீர் உள்ள காரணத்தால் ஒரு சில நாட்களில் நீர் திறந்துவிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு டெல்டா விவசாயிகளிடையே எழுந்துள்ளது.