பாசனத்திற்காக ஜூலை 19 ம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், 2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
கர்நாடக அணைகளில், இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.15 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.18 அடியை எட்டி உள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியதும் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறி இருந்தது. இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பி வருவது தொடர்பாக இன்று முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேட்டூர் அணை நீர்திறப்பால் காவிரி படுகையில் உள்ள 700 ஏரி, குளங்கள் நிரம்பி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும். சம்பா சாகுபடிக்கு தேவையான நெல், உரங்களை சேமித்து வைக்கும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அம்மாநில அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,500 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 80,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.