கோவையில் பேரிடர் மீட்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவி இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த போது படுகாயமடைந்து உயிரிழந்தார். பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் அளித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை பேரிடர் மேலாண்மை வாரியம் தெரியவந்துள்ளது.
கோவை அருகே நரசீபுரம் பகுதியில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் 20 மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவர்களும், மாணவிகளும் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது லோகேஸ்வரி என்ற மாணவி கீழே குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயற்சியாளர் ஆறுமுகம் மாணவியை கீழே தள்ளிவிட்டார். அப்போது எதிர்பாராத விதமாக முதலாவது மாடியின் சன் சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து லோகேஸ்வரி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே மாணவியின் உயிர் பிரிந்தது. மாணவி லோகேஸ்வரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆலாந்துறை காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியை பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. யார் அனுமதி அளித்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.