நமது விவசாயிகள் பயிர் பாதுகாப்பில் பாரம்பரிய அறிவும் தொழில் நுட்பமும் அறிந்தவர்களாக இருந்ததால் ரசாயன மருத்துகள் அறிமுகம் இல்லாத காலகட்டத்திலும் பயிர்களை நோய்கள் தாக்காவண்ணம் காத்து வந்தனர். எப்படி? கீழே உள்ள பாரம்பரிய தொழில்நுட்பம் மூலம் தான்.
நெல் பயிர் பாதுகாப்பில் பாரம்பர்ய தொழில் நுட்பங்கள்
ஒரு கிலோ அரைத்த பூண்டை 1 லிட்டர் மண்ணெண்ணையில் கலந்து இரவு முழுவதும் வைத்திருந்து வடிகட்டிய பின் 200 லிட்டர் நீருடன் கலந்து நெல் வயலில் தெளிக்கும் பொழுது புகையான் மற்றும் பச்சை தத்துப்பூச்சிகள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன.
முருங்கை மரத்தின் பட்டைகள் மற்றும் கிளைகளை நசுக்கி வயலில் பரப்பும் பொழுது அது நெல்லில் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்துகிறது.
மாட்டுசாணம் மற்றும் பொடியாக்கிய சேனைக்கிழங்கை வயலில் உள்ள நீரில் கலக்கும் போது, இது காற்றில் விஷத்தன்மையை ஏற்படுத்தி கூட்டுப்புழுக்களை கொல்கிறது.
சோளப் பயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்
தட்டை, அவரை போன்றவற்றை ஊடுபயிராக சோளத்துடன் பயிர் செய்யும் பொழுது இவற்றின் விரட்டும் தன்மையுடைய வாசனையால் சோளத்தில் தண்டு துளைப்பானின் தாக்கத்தை வெகுவாக குறைக்கலாம்.
சாம்பலை பால்கதிர் பருவத்தில் தூவுவதனால் கதிர்நாவாய் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
மக்காச்சோளப் பயிர் பாதுகாப்பில் பாரம்பரிய தொழில் நுட்பங்கள்
இரண்டிலிருந்து மூன்று கிலோ வரை தோலுரிக்கப்பட்ட வெங்காயச்சாற்றை நீருடன் கலந்து தெளித்தால் வர்ணமயமான வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்தலாம். மக்காச்சோள வயலை சுற்றி மூன்று வரிசை நேப்பியர் புல்லை நடுவதால் அதிலிருந்து வெளிப்படும் வாசனை தண்டு துளைப்பானை கவர்வது மட்டுல்லாமல் அதில் உற்பத்தியாகும் பிசின் போன்ற திரவம் மற்ற பூச்சிகளையும் கவரும். அதுமட்டுமல்லாது வேலிமசாலை மக்காச்சோளத்தின் இடையே பயிரிட்டால் அதிலிருந்து வெளிப்படும் வாசனை மக்காச்சோளத்தில் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்தும்.
கம்பு பயிர் பாதுகாப்பில் பாரம்பரிய தொழில்நுட்பங்கள்
ஐநூறு கிராம் வெல்லத்தை பத்து லிட்டர் நீரில் கலந்து கம்பு கதிரில் தெளிக்கும் பொழுது பூ வண்டுகளினால் ஏற்படும் சேதம் குறைகிறது.