கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு காலையில் 45,000 கனஅடியில் இருந்து 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளம் பாயும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. காவிரியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் காவிரி பாயும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வளத்துறை எச்சரித்துள்ளது.