பழனி கோயிலில் ஐம்பொன்னால் ஆன புதிய உற்சவர் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் கோயிலுக்கு எடுத்துச்செல்வது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் என சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராஜாராம் தெரிவித்துள்ளார்.
பழனி கோயிலில் ஐம்பொன்னால் ஆன புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையில் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புகாருக்கு உள்ளான சிலையின் அடையாளங்கள் குறிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சிலை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படுவதற்காக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராமிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஏ.டி.எஸ்.பி ராஜாராம், சிலை கும்பகோணம் குற்றவியல் கூடுதல் நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின்னர் திருநாகேஸ்வரம் அருகேயுள்ள திருமேனிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று கூறிய அவர் சிலையை மீண்டும் கோயிலுக்கு எடுத்துச்செல்வது குறித்து நீதிமன்றமே முடிவு செய்யும் என்று கூறினார்.