பூட்ச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கையாக பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

Forums Communities Farmers பூட்ச்சிக்கொல்லி இல்லாமல் இயற்கையாக பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6918
  Inmathi Staff
  Moderator

  இந்திய வேளாண்மை பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையுடையது. அப்போதைய பயிர் இரகங்கள் மற்றும் பயிர் உற்பத்தி முறைகள் அனைத்து மக்களுக்கும் உணவளிக்க போதுமானதாக இருந்தது. 1950 மற்றும் 60-ம் ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரிசெய்யவே இந்தியா பசுமைப்புரட்சியில் காலடி எடுத்து வைத்தது.

  இயற்கை வளங்களின் நீடித்த, நிலைத்த மேலாண்மை தொடர்பான திட்டமிடுதல் மற்றும் முடிவெடுத்தலில் உள் நாட்டு தொழில் நுட்பங்கள் (Indigenous Technologies) முக்கிய பங்கு வகிக்கின்றன. பசுமைப் புரட்சியின் விளைவாக விவசாய உற்பத்தி அதிக அளவில் இருந்த போதிலும் புதுமையான தொழில் நுட்பங்களை கடைபிடிக்க விவசாயிகள் அதிக அளவில் முதலீடு செய்ததால் அவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கின்றனர். எனவே, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் நவீன தொழில்நுட்பங்களைக் காட்டிலும் பழமையான தொழில்நுட்பங்களே விவசாயிக்கு பொருளாதாரரீதியாக நன்மை பயக்கும். இது போன்ற தொழிற்நுட்பங்களை நம் முன்னோர்கள் கையாண்டதால் இன்றைய விவசாயிகளைப் போல் பூச்சிகள், நோய்கள் பெருக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றை அவர்கள் எதிர் கொண்டதில்லை.

  பூச்சி மேலாண்மையில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்

  பழமையை கடைபிடிக்கும் விவசாயிகள் இன்றும் தங்களிடம் உள்ள இடுபொருட்களைக் கொண்டு பயிர் சுழற்சி, பலபயிர் சாகுபடி, ஊடுபயிர் முறைகளை பின்பற்றுகின்றனர்.

  எடுத்துக்காட்டு

  துலுக்கமல்லியும் பருத்தியும் ஊடுபயிராகப் பயிரிடும் போது பருத்தியிலுள்ள அமெரிக்கன் காய்ப்புழுவை துலுக்கமல்லி கவர்ந்திழுக்கிறது.
  கத்தரியுடன் வெங்காயம் ஊடுபயிராகப் பயிரிடும் போது கத்தரியில் வரும் தண்டு மற்றும் காயத்துளைப்பான் கட்டுப்படுத்தப்படுகிறது.
  முட்டைகோசில் கொக்கிப்புழுவைக் கட்டுப்படுத்த வரப்போரத்தில் ரோஸ்மேரி, புதினா போன்ற செடிகளை நடலாம்.
  இஞ்சி நடவு செய்த வயலின் ஓரத்தில் வளர்ந்திருக்கும் எருக்கு, இஞ்சியில் சேதம் விளைவிக்கும் புழுக்களை கவர்கிறது.
  நிலக்கடலை பயிரிடப்பட்ட நிலத்தை சுற்றி தட்டைப்பயறு மற்றும் ஆமணக்கு பயிரிடும் பொழுது அவை நிலக்கடலையில் வரும் சிவப்பு கம்பளிப் புழுக்களை கவரும்.
  பூச்சி மேலாண்மையில் தாவர பூச்சிகொல்லியின் பங்கு

  வேம்பு

  விதைகள் மற்றும் தூள் செய்யப்பட்ட வேப்பங்கொட்டைகளை கலந்து வைக்கும் பொழுது காப்ராவண்டு மற்றும் சிறிய தானியவண்டுகளை இது கட்டுப்படுத்துகிறது.

  பூவரசு

  இம்மரத்தின் இலைச்சாறு நெல்லில் படைப்புழுக்கள், கரும்பில் தண்டு துளைப்பான் மற்றும் தானிய பயிர்களில் வரும் காயத்துளைப்பான் ஆகியவற்றிற்கு சிறந்த ஊன் தடுப்பானாக செயல்படுகிறது.

  பால் வடியும் யூஃபோர்பியேசியே குடும்ப தாவரங்கள்

  இக்குடும்பத் தாவரங்களின் தண்டு, கிளை, மொட்டு ஆகியவற்றில் காணப்படும் பூச்சிகொல்லி மற்றும் பூச்சிவிரட்டும் தன்மையால் அசுவிணி மற்றும் வெட்டுக்கிளி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். மேலும், இச்செடியின் இலை, விதைகள் மற்றும் வேர் போன்றவற்றை நீரில் ஊறவைத்து பெறப்படும் சாற்றினைத் தெளிக்கும் பொழுது காய்கறிப் பயிர்களில் வரும் புழுக்களையும், இளஞ்செடியில் வரும் கரையானையும் கட்டுப்படுத்தலாம்.

  துளசி

  துளசி இலை மற்றும் விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் பெரும்பாலான பூச்சிகளுக்கு பூச்சிவிரட்டியாகவும், நஞ்சு மிகுந்ததாகவும், பூச்சியின் வளர்ச்சியை தடைசெய்வதாகவும் உள்ளது.

  தொகுப்பு: ச கண்ணன்: மூத்த வேளண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், திருவாரூர்

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This