ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது.
பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தாயராகினர். ஆனால் மீன் துறை அதிகாரிகள் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை வந்துள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் வழங்காமல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்தனர்.
இந்த திடீர் தடை உத்தரவால் 100–க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென்கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தெற்குவாடி துறைமுக பகுதியிலேயே நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இத்தடை நீடிக்கும் என தெரிகிறது.