டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த அத்திப்பட்டில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கழக எண்ணெய் கிடங்கில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல தனியார் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் வங்கி உத்தரவாதத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9ம் தேதி முதல் லாரிகள் இயக்கப்படவில்லை.
இதற்கிடையே, வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. புதிய ஒப்பந்த விதிகள் ஒப்பந்ததாரருக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என மனுதாரர் சார்பில் வாதாடப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிமன்றம், லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்தது. மேலும் தமிழக அரசு, டிஜிபி, டேங்கர் லாரி உரிமையாளர்கள் இரண்டு வாரங்களில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.