சிறுமி ஹாசினியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி கொலை செய்த துஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 2017-ம் ஆண்டு சென்னை மாங்காட்டில் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்ததாக தஷ்வந்த் என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார் தஷ்வந்த். ஜாமீனில் வெளிய வந்த அவர், செலவுக்கு காசு கொடுக்காததால் தாய் சரளாவை கொலைசெய்துவிட்டு டிசம்பர் மாதம் தலைமறைவானார்.
அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், மும்பையில் பதுங்கிருந்த தஷ்வந்தை மீண்டும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். சிறுமி ஹாசினி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தஷ்வந்த்துக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் விமலா, ராமலிங்கம் அடங்கிய அமர்வு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகியது. அதில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்த்துக்கு அளித்த தூக்குத்தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.