தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வை 1.07 லட்சம் தமிழக மாணவர்கள் எழுதினார்கள். அப்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு குளறுபடி நடந்துள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் கொடுக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம் பஷீர் ஆகிய இருவர் அமர்வு, ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களும் சேர்த்து 196 மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஜூலை 12ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.