வேதிப்பொருள்கள் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனை விவகாரம் : ஓர் அலசல்

Forums Communities Fishermen வேதிப்பொருள்கள் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனை விவகாரம் : ஓர் அலசல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #6795
  Inmathi Staff
  Moderator

  கடந்த சில நாள்களாகவே மீன் உணவுப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பார்மலின் கலக்கப்பட்ட மீன்கள் என்ற செய்திகள் பரவலாக வந்த வண்ணம் உள்ளன. கேரளாவில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் வாகனங்களில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீன்களில் இந்த வேதிப் பொருள் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்திருந்தது. கேரளாவில் உருவான இந்த பார்மலின் பீதி தமிழகத்தையும் தொற்றிக் கொண்டது. மீன்களில் பார்மலின் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் ஏதேனும் கலக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட மீன் வியாபரிகளின் கிடங்குகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தியிருந்தனர். ஆனால், அத்தகையதொரு வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டதற்கான எவ்வித தடயமும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.

  பொதுவாக,  பார்மலின்  என்ற வேதிப்பொருள் இறந்த மனித உடல்களை  நாள்கணக்கில் கெட்டுப் போகாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. இதனை, உணவாக உட்கொள்ளும் மீன்களில் கலப்பதன் மூலம், அதனை தொடர்ந்து உண்பவர்களுக்கு கேன்சர் உள்ளிட்ட கொடும் நோய்கள் வரக் காரணமாக இருப்பதாக மத்திய மீன்வளப் பல்கலைகழக பேராசிரியர் அசோக் குமார் கூறுகிறார். ஆனால், பார்மாலின் மற்றும் அமோனியா  மட்டுமல்லாது, கடல் உணவுகள் கெட்டு போகாமல் பாதுகாக்க சோடியம் பென்சொனேட் எனும் வேதிப் பொருட்களும் கலக்கப்படுவதாக கூறுகிறார் தேசிய மீனவர் பேரவை தலைவரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏவுமான இளங்கோ. இந்த வேதிப் பொருட்களானது பரவலாக பாட்டில்களில் அடைக்கப்பட்ட ஊறுகாய், குளிர்பானங்கள் ஆகியவற்றில் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன. “ சோடியம் பென்சொனேட்டும் நாம் தினசரி உண்ணும் மீன்களில் சேர்க்கப்பட்டிருந்தால், ஆரம்பத்தில் அலர்ஜி உள்ளிட்ட நோய்களை உருவாக்கி, புற்று நோய் வரை உருவாக்க வல்லது” எனக் கூறுகிறார் பேராசிரியர் அசோக் குமார்.

  கேரளாவில் பார்மாலின் மற்றும் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட மீன்கள் பிடிபட்ட  நிலையில், அவை தமிழகம் மற்றும் ஆந்திராவிலிருந்து கொண்டுவரப்பட்டவை என  ஆங்காங்கே பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், கேரள அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதனை மறுக்கின்றனர். “நாங்கள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் சோதனைகள் செய்து வருகிறோம். பல இடங்களில் பார்மாலின், அமோனியா மற்றும் சோடியம் பென்சோனெட் வேதிப் பொருட்கள் கலந்த மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை குறிப்பிட்ட மாநிலங்களைச் சார்ந்த வியாபாரிகளால் கொண்டுவரப்பட்டவை எனக் கூற இயலாது. பரவலாக, வட மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களிலிருந்தும் மீன்கள் கேரளத்திற்கு விற்பனைக்காக வருகின்றன. அவற்றில் சிலவற்றில் இத்தகைய வேதிப்பொருட்கள் கலந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம்.” எனக் கூறுகிறார், கேரள அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வு அதிகாரி விஜித். மேலும், அவர் இந்த வேதிப்பொருட்கள் குறித்த அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார். ஆனால், கேரளாவில் வேதிப் பொருட்கள் கலந்த மீன்கள் பிடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அத்தகைய மீன்கள் விற்கப்படுகிறதா என்று அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அந்த சோதனைகளில் சில இடங்களில் அத்தகைய வேதிப் பொருள்கள் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனையாவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இதனிடையே,  மீனவர்கள் தான் மீன்களில் வேதிப்பொருள்கள் கலந்து விற்கின்றனர் என்பது போல் பரப்பப்படும் செய்திகளை  திட்டவட்டமாக மறுக்கிறார் தேசிய மீனவர் பேரவையின் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோ, அவர் கூறுகையில் “மீனவர்கள் மாதக் கணக்கில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றாலும் கூட, ஐஸ் கட்டிகள் மற்றும் ப்ரீசர் உள்ளிட்ட வசதிகளுடனேயே செல்கின்றனர். அவர்கள், ஒரு கிலோ மீனுக்கு கிட்டதட்ட அதற்கு இணையான எடையுள்ள பனிக்கட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவர்கள், கரைக்கு கொண்டு வந்ததும் அவர்களிடமிருந்து மொத்த வியாபாரிகள் மீன்களை விலைக்கு வாங்குகின்றனர். பின்னர் அதனை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்த வேதிப் பொருட்கள், அதிக லாபம் பெற வேண்டும் என்ற சிந்தனை கொண்ட சில பேராசைமிக்க வியாபாரிகளால் கலக்கப்படுகிறது. இத்தகைய வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனையாவதை தமிழக, கேரள, புதுவை அரசுகள் அனுமதிக்கக்கூடாது. “ எனக் கூறுகிறார். அவரது இந்த கருத்தையே, குளச்சலை சேர்ந்த படகு உரிமையாளரும், மீனவர் ஒருங்கிணைப்பு சங்க நிர்வாகியுமான ஆன்றோ லெனினும் ஆமோதிக்கிறார். ஆன்றோ கூறுகையில், “ கடலில் மீனவர்களால் பிடித்து வரப்படும் அதே மீன்களைத் தான் மீனவர் குடும்பங்களும் உண்ணுகின்றனர். பொதுவாக, ஐஸ்கட்டிளின் மேற்பகுதி கரையாதிருக்க, அதன் மேல் உப்பினை போடுவது வழக்கம். மற்றபடி , இயற்கையில் கேடற்ற சத்துக்கள் கொண்ட அசைவ உணவான மீனில் வேதிப்பொருட்கள் சேர்க்கிறார்கள் எனக் கூறுவதன் பின்னில் மறைமுக உள்நோக்கங்கள் எதுவும் இருக்கலாம்.” எனக் கூறுகிறார் அவர்.

  • This topic was modified 2 years, 11 months ago by Inmathi Staff.
Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This