சென்னை மண்ணில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்து, மெரினாவை கண்டு ரசித்துள்ளனர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவிகள்.
மெரினாவை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்கிற ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார். பலாம்பட்டு, ஜார்த்தன்கொள்ளை, பெய்ஞ்சமந்தை ஆகிய மலைக் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த மாணவிகள். சரியான சாலை வசதிகள் கூட இல்லாத இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவிகளின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகள். மலைக்கிராமத்தை தாண்டி வெளி வருவதே இவர்களுக்கு அரிதான விஷயம். பல நாள் கனவை அடைந்து விட்டதாகவும், பெரும் மகிழ்ச்சியோடு இருப்பதாக சொல்கின்றனர் மலைக்கிராம மாணவிகள்.
மெரினாவின் அழகை கண்டு வியந்த பின், அருகில் இருக்கும் அறிஞர் அண்ணா சமாதிக்கு அணிவகுத்து சென்றனர். அண்ணாவின் சிறு வரலாற்று குறிப்பை படித்து, ஆர்வமாக அவரது சமாதியில் வலம் வந்து, தங்களது சென்னை பயணத்தை இனிதே முடித்தனர் மலைக் கிராம இளவரசிகள்.
Source : News7 Tamil