தற்போது அதிக லாபம் தரும் தொழில் ஒன்று ஆடு வளர்ப்பு. அதிலும் முக்கியமாக கிடாய்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போதுபிரபலமாகி வரும் செம்மறி கிடாய் வளர்ப்பு பற்றி பார்ப்போம்.
இரகங்கள்
ஆடு வளர்க்கும் முன் லாபம் தரும் இரகங்களை தேர்ந்தெடுப்பது லாபம் அடைவதற்கான உத்தியாகும். அதனால் வேகமாக, குறுகிய காலத்தில் எடை அதிகரிக்கும் இரகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
கூடூர் வெள்ளை மற்றும் ராமநாதபுரம் சிகப்பு ரக செம்மறி ஆடுகள் பிரபலமானவை. சிகப்பு ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவை. வட தமிழகத்தில் அதிகமாக வெள்ளை ரகங்கள் வளர்க்கப்படுகின்றன. ஏனெனில் வெள்ளை இரகங்கள் வேகமாக வளர்கின்றன.
தீவனம்
புல் வகைகளை மட்டுமே விரும்பி உண்கின்றன. அதனால் செம்மறி ஆடுகளை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. இவை வெள்ளாடுகள் போன்று தழைகளை விரும்புவது இல்லை.
இதனால் ஓரளவு இயற்கை முறையில் களை கட்டுப்படுத்த முடியும். பகலில் இவற்றால் இடக்கூடிய சாணம் வயலில் உரமாகிறது. மாலையில் வளர்ப்பு புல் வகைகளை அறுவடை செய்து உணவாக கொடுக்கலாம்.
அடர்தீவனம் அவசியம் கொடுக்க வேண்டும். கம்பு, மக்காச்சோளம், கடலை புண்ணாக்கு, உளுந்து பொட்டு தூள் இவற்றுடன் தாது உப்பு கலவை தகுந்த விகிதத்தில் கலந்து அளிப்பதால் மிக திடமாக வளரும்.
குடற்புழு நீக்கம்
மூன்று மாதங்களில் முதல் குடற்புழு நீக்கம் செய்து பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்வது மூலம் எடை விரைவாக அதிகரிக்கும்.
நோய் தடுப்பு
செம்மறி ஆடுகளுக்கு அந்தந்த பருவங்களில் தாக்கும் நோய்களுக்கு ஏற்ப தடுப்பூசிகள் போடவேண்டும். கிடாக்களுக்கு விதை நீக்கம் அவசியம் இதன் காரணமாக ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டுக்கொள்வது தவிர்க்கலாம். மற்றபடி அதிக எடை விரைவாக வரும்.
விற்பனை
ஆறு முதல் எட்டு மாதம் வரை வளர்க்கப்பட்டு இஸ்லாமியப் பண்டிகைகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன. 25 முதல் 30 கிலோ எடை வந்த உடனே விற்பனை செய்யப்படுகிறது.