காரைக்கால் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பது: மீனவர்களாகிய நமக்கு, நமது முன்னோர் அளவோடு ஆண்டு அனுபவித்து, பாதுகாத்து நமக்கு விட்டுச்சென்ற கடல் வளத்தை நாமும் பாதுகாப்பது நமது முக்கிய கடமை. அந்த வகையில், புதுச்சேரி மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் 2009 படி, கடல் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு, தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளான சுருக்கு வலை, இரட்டைமடி வலைகளை கொண்டு மீன் பிடிக்க கூடாது என்றும், தடை செய்யப்பட்ட கடல் சங்கு, கடல் அட்டை, கடல்குதிரை போன்ற மீன் வகைகளையும் பிடிக்க கூடாது.
கரையிலிருந்து 3 கடல் நாட்டிகல் மைல்க்கு அப்பால்தான் மீன்பிடிக்க வேண்டும் என முன்பே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சிலர் அரசின் இந்த விதிமுறைகளை மீறிவருவது கண்டறியப்பட்டுள்ளது. இனி இது போன்ற செயல்களில் மீனவர்கள் ஈடுபட்டால், மாவட்ட மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.