ராமேஸ்வரத்தில் வேளாண்மை மற்றும் மீன் வளம் சார்ந்த எம்.பிக்கள் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. அதில் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,” இந்தியாவில் மீன் உற்பத்தி ஆண்டுக்கு 1.14 கோடி டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.கரையோர பகுதிகளில் குறைந்த அளவிலான மீன் வளமே உள்ளதால், கடல் அலை குறைந்த பகுதிகளில் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம். இதற்காக தேசிய மீன் வள வாரியம் ரூ.1.14 கோடி ரூபாயை கடல் மீன் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கியுள்ளது. இத்திட்டம் கடலோர மாநிலங்களில் சோதனை முறையில் 14 இடங்களில் செயல்படுத்தப்படுகிறது. வெற்றி பெற்றால் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். நீலப்புரட்சித் திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன் பிடி படகு கட்டுவதற்காக மீனவர்களுக்கு 40 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.” என அவர் பேசியதாக இராமநாதபுரம் மாவட்ட மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.