ராமநாதபுரம் தொண்டியில் விசைப்படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் பலியானார். இதுகுறித்து ராமநாதபுரம் கடலோர பாதுகாப்புக் குழு போலீஸார் பதிந்துள்ள முதல் தகவல் அறிக்க விபரம் :
தொண்டியை அடுத்த சம்பை கிராமத்தை சேர்ந்தவர் செபஸ்தியான் என்பவர் மகன் ஜான்போஸ்கோ. (65)நேற்று முன்தினம் சோளியக்குடி லாஞ்சியடியை சேர்ந்த அஞ்சப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜான்போஸ்கோ மற்றும் மணக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
சுமார் 6 கடல் மைல் தூரத்தில் மீன்பிடிக்க வலைவிரித்து கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகிற்குள் கடல்நீர் புகுந்துள்ளது. உடனே அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் உதவியுடன் கரையை நோக்கி வந்தனர். ஆனால் அதற்குள் படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது.
அதில் படகில் இருந்த ஜான்போஸ்கோ, சேகர் ஆகியோர் கடலில் குதித்து, அந்த பகுதியில் இருந்த மற்றொரு படகிற்கு நீந்தி சென்றனர். அதில் ஜான்போஸ்கோ மாயமானார். இதுகுறித்து கரை திரும்பிய மீனவர், ஜான்போஸ்கோவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று ஜான்போஸ்கோவின் உடல் கடலில் பிணமாக மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மீனவர்கள் அவரது உடலை மீட்டு சோளியக்குடி கரைக்கு கொண்டுவந்தனர்.
தகவலறிந்த தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அய்யனார் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.