நாகை மீனவள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு 3வது வாரத்தில் நடக்கிறது.நாகப்பட்டினம் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை, பல்கலைக்கழக இணைய தளத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பெலிக்ஸ் வெளியிட்டார். இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு 2956 விண்ணப்பங்களும், இளநிலை மீன்வள பொறியியல் பட்டப்படிப்பிற்கு 929 விண்ணப்பங்களும், இளநிலை உயிர் தொழில் நுட்பவியல் பட்டப்படிப்பிற்கு 527 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. தூத்துக்குடியை சேர்ந்த மாணவி எமிமா 199 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி பவித்ரா ராஜி 198.75 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ரோஷிணி 197.25 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பிற்கு 141 இருக்கைகளும், இளநிலை மீன்வள பொறியியல்பட்டப்படிப்பிற்கு 30 இருக்கைகளும், இளநிலை உயிர் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பிற்கு 40 இருக்கைகளும் உள்ளன. நடப்பாண்டு நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம் மாவட்டங்களிலிருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3வது வாரத்தில் நடைபெற உள்ளது என பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழு தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.