மீன்களில் பார்மலின் வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் மீன் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், கேரள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அமரவிளை செக் போஸ்ட் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டன் கணக்கில் பார்மலின் வேதிப்பொருள் கலக்கப்பட்ட மீன்கள் பிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் ஆந்திராவிலிருந்து கொண்டு செல்லப்படும் மீன்கள் குறித்து கேரள மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குமரி மாவட்ட மீன் பிடித் துறைமுகங்களில் பிடித்துக் கொண்டு வரப்படும் மீன்களும் கூட கடுமையான விலை வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. ” வழக்கமாக ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படும் மீன்கள், நேற்று வெறும் 30 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே விற்கப்பட்டுள்ளது” என முட்டத்தை சேர்ந்த மீனவர் தா. பணியடிமை கூறுகிறார்.