கல்வித் துறையைத் தனியாரிடம் ஒப்படைக்க உயர் கல்வி ஆணையம் முடிவு: வைகோ கண்டனம்

Forums Inmathi News கல்வித் துறையைத் தனியாரிடம் ஒப்படைக்க உயர் கல்வி ஆணையம் முடிவு: வைகோ கண்டனம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5758
  Kalyanaraman M
  Keymaster

  நாடாளுமன்றத்தில் 1956-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பல்கலைக் கழக
  மானியக் குழு (யுஜிசி) அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள்,
  உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கவும், கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும்,
  மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் பல்கலைக் கழக மானியக் குழுவின்
  நோக்கங்களாக வரையறுக்கப்பட்டது கடந்த 60 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பல்கலைக்
  கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு, ‘உயர்கல்வி ஆணையம்’ அமைப்பதற்கு சட்ட
  முன்வடிவு ஒன்றை பொதுமக்கள் கருத்தறிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
  வெளியிட்டுள்ளது.

  2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ‘உயர்கல்வியைச் சீர்திருத்தவும் மேம்படுத்தவும்
  ஆலோசனை கூறும் குழு’ ஒன்றைப் பேராசிரியர் யஷ்பால் தலைமையில் அமைத்தது. யஷ்பால்
  குழு 2009 ஜூன் 24-இல் தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது. அதில் உயர்கல்வித்
  துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறிப்பாக, கல்வியில் தனியார் துறையை
  முறைப்படுத்துதல், பல்கலைக் கழகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துதல், ஆராய்ச்சிக்
  கல்வியைத் தரம் உயர்த்துதல் போன்றவற்றிற்குப் பரிந்துரைகள் கூறப்பட்டிருந்தன. இவற்றைச்
  செயல்படுத்த ‘தேசிய அறிவுசார் ஆணையம்’ அமைக்கப்பட வேண்டும் என்று யஷ்பால் குழு
  அளித்த அறிக்கையின் அடிப்படையில் 2011-இல் நாடாளுமன்றத்தில் அப்போதைய மனிதவள
  மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல், சட்ட முன்வடிவு ஒன்றைத் தாக்கல் செய்தார். 2014-இல்
  பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்ற பின்னர் இதனைத் திரும்பப் பெற்றது.

  ஆனால், புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையில் ஒரு
  புதிய குழுவை பா.ஜ.க. அரசு அமைத்தது. இக்குழு தனது வரைவு அறிக்கையை 2016-இல் மத்திய
  அரசிடம் அளித்தது.

  புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் பல பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.
  பல்கலைக் கழகக் கட்டுமானங்களில் மாற்றம் செய்தல்; பல்கலைக்கழக ஆட்சிமன்றங்களில்
  கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெறச் செய்தல்; உயர்கல்வி பாடத்
  திட்டங்களைக் கல்வியாளர்கள் தீர்மானிப்பதை நிறுத்திவிட்டு ‘சந்தைக்கு ஏற்ப கல்விமுறை’ என்ற
  வகையில் அதைத் தனியாரிடம் ஒப்படைத்தல் போன்ற திருத்தங்களைச் செயற்படுத்த வேண்டும்.

  மேலும், கல்லூரிகளுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்குவது என்ற பெயரில் அவை குறைந்த
  கட்டணத்தில் கல்வி அளிப்பதைத் தடுத்து அவற்றை வணிக மயமாக்குவது, கல்லூரிகள் தமக்குத்
  தேவையான நிதி ஆதாரங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்து நிற்பது போன்ற
  பரிந்துரைகள் மூலம் உயர்கல்விச் சூழலை முற்றிலுமாகத் தனியார் மயமாக்குவதற்கு டி.எஸ்.ஆர்.
  சுப்பிரமணியம் குழு திட்டம் வகுத்துத் தந்துள்ளது.

  உயர்கல்வி நிறுவனங்களில் மிக முக்கியமான பிரச்சினை கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை;
  மேலும் தேவையான அளவுக்குக் கட்டுமான வசதிகள் இல்லாமல் கல்லூரிகளும் பல்கலைக்
  கழகங்களும் இயங்கி வருவது. இவை போன்ற பிரச்சினைகளில் அரசோ, நீதிமன்றங்களோ
  தலையிடக் கூடாது. இதற்காக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கல்விக்காகத் தனி
  ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். பல்கலைக் கழக மானியக் குழு போன்ற
  கல்வித்துறைச் சார்ந்த உயர் அமைப்புகள் இனி தேவை இல்லை என்றும் புதிய கல்விக்
  கொள்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

  மோடி அரசால் உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டு வர
  மூன்று ஆண்டு செயல்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதிலும் ‘கல்வி மற்றும் திறன்’ வளர்ச்சியை
  மையமாகக் கொண்டு, உயர்கல்வித் துறையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு (ஞஞஞ)
  அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, பல்கலைக் கழகங்கள், உயர்கல்வி
  நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்
  என்று ‘நிதி ஆயோக்’ அறிவுறுத்தி இருக்கிறது.

  இதன் அடிப்படையில்தான், பல்கலைக் கழக மானியக் குழுவை ஒழித்து விட்டு உயர்கல்வி
  ஆணையம் அமைக்கவும், அதனைத் தொடர்ந்து கல்வித் துறையில் ஏகபோக அதிகாரம்
  செலுத்தும் ‘ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம்’ ஒன்றை உருவாக்கவும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.
  அரசு திட்டமிட்டுள்ளது.

  உயர்கல்வி ஆணையம் கல்வி தொடர்பான பணிகளை மட்டுமே மேற்கொள்ளும்; கல்லூரிகள்,
  பல்கலைக் கழகங்களுக்கு மானியம் மற்றும் நிதி உதவிகள் வழங்கும் பணிகளை இனி மனிதவள
  மேம்பாட்டுத் துறை அமைச்சகமே மேற்கொள்ளும். புதிய உயர்கல்வி நிறுவனங்களைத்
  தொடங்குதல், பல்கலைக் கழகங்களின் முக்கியப் பொறுப்புகளுக்குத் தேவையானவர்களைத்
  தேர்வு செய்தல் போன்றவற்றிற்கு ‘உயர்கல்வி ஆணையம்’ நெறிமுறைகளை வகுக்கும் என்று
  சட்ட முன்வடிவில் கூறப்பட்டிருக்கிறது.

  பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டங்கள் உருவாக்கம்; உயர்கல்வி நிறுவனங்களை
  கண்காணித்தல்; உயர்பதவிகளுக்கு தகுதி மிக்கவர்களைத் தேர்வு செய்தல் போன்றவை மாநில
  அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. உயர்கல்வி ஆணையம், ஒற்றை ஒழுங்குமுறை
  ஆணையம் போன்ற அமைப்புகளை உருவாக்கி, மாநில அரசுகளின் அதிகாரத்தை முழுமையாக
  பறித்துவிட்டு மத்திய அரசே கல்வித் துறையில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்த பா.ஜ.க. அரசு
  திட்டமிடுகிறது.

  உயர்கல்வித் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, தனியாரைச் சார்ந்து இயங்கும்
  நிலையை ஏற்படுத்தி, உயர்கல்வியை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகள்
  பெரிதும் ஆபத்தானவை; கண்டனத்திற்கு உரியது.

  உயர்கல்வித் துறையைத் தனியாரிடம் தாரை வார்க்கும் வகையிலும் மாநில அரசுகளின் கல்வி
  உரிமையைப் பறிக்கும் வகையிலும் ‘உயர்கல்வி ஆணையம்’ அமைக்கும் மத்திய அரசின்
  முயற்சியைத் தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் பொது
  அதிகாரப் பட்டியலில் இருந்து ‘கல்வியை’ மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்
  என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This