செலவே இல்லாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Forums Communities Farmers செலவே இல்லாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5745

  விவசாயத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதுதான். அதற்கு  பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது அது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. சுற்றுசூழலுக்கும் பாதிப்பில்லாமல் விவசாயிகளுக்கும் அதிக செலவில்லாமல் இயற்கையான முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வழி சொல்கிறார் ‘விவசாயம் கற்கலாம்’ முகநூல் பக்கத்தின் வழியாக மதுபாலன், தோட்டக்கலை துறை அதிகாரி.

  இயற்கை நமக்கு கொடுக்கும் செலவில்லாத தொழில் நுட்பங்கள்:

  1. ஆமணக்கு வெளியடுக்கு
  ஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறைவாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது.
  2. தட்டை பயிரிடுதல்
  தட்டைச் செடிகளை வரப்போரங்களில் அல்லது ஊடுபயிராக நடலாம். இவை அசுவினிப் பூச்சிகள் வளர்வதற்கு ஏற்ற செடியாகும். அசுவினிப்பூச்சிகள் ஒரளவு வந்தவுடன் அசுவினியை உண்ண பொறிவண்டுகள் மற்றும் பல நன்மை செய்யும் பூச்சிகள் வருகின்றன.
  3. மக்காச்சோளம்
  மக்காச்சோளத்தில் இறைவிழுங்கிகள் அதிகம் தங்கியிருக்கும். இதை வரப்பைச் சுற்றியோ அல்லது ஊடுபயிராகவோ பயிர் செய்யும்போது நிறைய இறைவிழுங்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பயிரைத்தாக்கும் பூச்சிகளை அழிக்கிறது.
  மேலும், மக்காச்சோளம் பறவைகள் உட்காருவதற்கு உதவியாக இருக்கும். பூச்சிவிழுங்கிப் பறவைகள் இதில் அமர்ந்து பயிரைத்தாக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்.
  4. மஞ்சள் வண்ணப்பூச்செடிகள்
  செண்டு மல்லி எனப்படும் துலுக்க சாமந்தியின் வேர்களில் இருந்து சுரக்கும் திரவங்கள் நூற்புழுக்களைக் கொல்லக்கூடியவை. இந்த திரவங்கள் ஒரு சதுர மீட்டர் பரப்பளவிற்கு செல்லக்கூடியவை. எனவே பயிர்களுக்கு அருகிலேயே துலுக்க சாமந்தியை நடவேண்டும்.
  5. வேப்பங்கொட்டைக் கரைசல்
  பாரம்பரியமாக நாம் பயன்படுத்தும் வேம்பில் 18 வகையான ஆல்கலாய்டு உள்ளது. இதில் முக்கியமானது அஸாடிராக்டின் என்ற ஆல்கால்ய்டு. இதனால் வேப்பங்கொட்டையில் எடுக்கப்படும் வேப்பெண்ணை சிறந்த இயற்கைமுறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. வேப்பிலையில் 10 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பம்பட்டையில் 8 வகையான ஆல்கலாய்டுகளும், வேப்பங்கொட்டையில் 18 வகையான ஆல்கலாய்டுகளும் உள்ளன.
  கடைகளில் கிடைக்கும் வேப்பெண்ணை இரும்பு செக்கில் அரைக்கப்படுவதினால், வெப்பத்தினால் ஆல்கலாய்டுகள் சிதைந்து விடுகின்றன, இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகள் இருக்கவேண்டிய வேப்பெண்ணெயில் 8 வகையான ஆல்கலாய்டுகள் மட்டுமே உள்ளன.
  இதனால் வேப்பெண்ணையை பயன்படுத்துவதை விட, வேப்ப முத்துக்களை சேகரித்து அதை இடித்து பயன்படுத்துவதுதான் சிறந்தது, இதனால் 18 வகையான ஆல்கலாய்டுகளும் முழுமையாகக் கிடைக்கிறது.
  வேப்பங்கொட்டைக் கரைசலை பயிர்களுக்கு தெளிக்கும்போது, வேப்பங்கொட்டைக் கரைசல் பயிர்களின் மேல் படிகிறது. பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்க்கட்டுப்பாடு இரண்டிற்கும் வேப்பங்கொட்டைக் கரைசல் நல்ல தீர்வாக உள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This