கடலூர் மாவட்டத்தில் மீனவர் குறை கேட்புக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய சோன்ங்குப்பத்தை சேர்ந்த மீனவர் தங்கமணி கலெக்டரிடம் சுருக்குவலையை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், படகுகள், வலைகள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்தீர்கள். ஆனால் மீன்பிடி தடைகாலம் முடிந்து 2 நாட்களுக்கு பிறகு தேவனாம்பட்டினம் மீனவர்கள் கையில் ஆயுதங்களுடன் படகில் சென்று கடலில் மீன்பிடித்து வருகிறார்கள். சுருக்குவலையை பயன்படுத்துவதற்கான தடை ஆணையை உடனே நிறைவேற்ற வேண்டும். இதை மீறி செயல்படும் தேவனாம்பட்டினம் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை, அவர்கள் மட்டும் தான் வாழ வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் அனைவரும் ரேஷன்கார்டு, ஆதார் அட்டைகளை தங்களிடம் ஒப்படைத்துவிடுகிறோம். எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்த கலெக்டர் தண்டபாணி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். இந்த பிரச்சினை 18 ஆண்டுகால பிரச்சினை. ஒரே நாளில் தீர்வு காண முடியாது. உரியகாலத்தில், உரிய நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி இருக்கிறது. இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. எனவே நீங்கள் யாரும் மாவட்ட நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை இழக்க வேண்டாம். இதேபோல் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.