இயற்கை விவசாயம் செய்துவரும் 80வயது டாக்டர் எம்.ஜெ.நரசிம்மன்!

Forums Communities Farmers இயற்கை விவசாயம் செய்துவரும் 80வயது டாக்டர் எம்.ஜெ.நரசிம்மன்!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5669

  ஸ்டெத்தெஸ்கோப் பிடித்து மருத்துவம் பார்க்கிற டாக்டர், விவசாயியாக நிலத்தில் இறங்கி வேலை செய்வதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் தென்னாங்கூர் கிராமத்தில் மருத்துவராக பணிபுரியும் எம்.ஜெ.நரசிம்மன் என்ற 80 வயது புதுமை இளைஞர் விவசாயம் லாபம்தரும் தொழில் என்கிறார். அவருடன் நமது ஆசிரியர் எம்.ஜெ.பிரபு கண்ட நேர்காணலில் டாக்டர் நரசிம்மன் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

  ”எனக்கு நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத்தின் மீது ஈர்ப்பு  ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நானும் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தேன்” என்றவரிடம் இயற்கை விவசாயத்தில் என்ன வகையான பயிர்களை பயிரிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, ”நெல் தான் பயிர் இடுகிறேன். ஒரு பயிர் நன்கு வளர மண்ணின் வளம், சுற்றுச்சூழல், தண்ணீர் இது மூன்றும் தான் மிக முக்கியம் என நினைக்கிறேன்” என்றார்.

  விவசாயம் லாபம் தருகிறதா என்ற கேள்விக்கு  பதில் அளித்த நரசிம்மன், ”விவசாயம் பெருத்த லாபத்தைத் தரக் கூடிய தொழில் அல்ல. ஆனால் இயற்கை  ஒத்துழைத்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படாது. மண்ணில் போட்ட எதுவும் வீண்போகாது. நிச்சயம் பலன் அளிக்கும். 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது பக்கத்து நிலத்தில் இருந்து பயிர்கள் எல்லாம் பாழாகின. ஆனால், பல வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் என் நிலத்தில் பயிரடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்படவில்லை. இதற்கான காரணம் இதுவரை புரியவில்லை” என்றார்.

  இயற்கை விவசாயத்தில் அதிக உற்பத்தி கிடைக்குமா என்ற கேள்விக்கு,” எனக்கு ஒரு ஏக்கருக்கு 40-45 மூட்டை நெல் கிடைக்கிறது. அதை நெல்லாகக் கொடுத்தால் லாபம் இல்லை. அரிசியாகக் கொடுத்தால் நேரடியாக நம்மிடம் வந்து வாங்கிக்கொள்ள வியாபாரிகள் இருக்கிறார்கள். வருமானமும் கிடைக்கிறது” என்றவரிடம் என்ன வகை நெல் பயிரிடுகிறீர்கள் என்றதற்கு,”குள்ளகார், கிச்சடி சம்பா ஆகிய பாரம்பரிய நெல் வகைகளைத்தான் பயிர் செய்கிறேன். இந்த நெல்வகைகளை, பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்து வரும் நெல்  ஜெயராமனிடம் வாங்கிபயன்படுத்துகிறேன்” என்றவர்,”இளைஞர்கள், தொழில்நுட்பம், அரசு இம்மூன்று விஷயங்களும் ஒரு நேர்க்கோட்டில் இணைந்தால்  தான் விவசாயத்தை வெற்றிகரமான தொழிலாக மாற்ற முடியும். குறிப்பாக இளைஞர்கள் விவசாயம் செய்ய வேண்டும்” என்றார்.

  மருத்துவர் எம்.ஜெ.நரசிம்மனை அணுக செல்பேசி: 9445382725

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This