காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 84 அடியாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதனையடுத்து கபினி அணை திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 13ஆம் தேதி முதல் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று மாலையில் அணைக்கு 61 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதனால், அணையின் நீர்மட்டம் 82 அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென்று கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 44 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு 53 ஆயிரத்து 483 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர் நீர்வரத்தால், அணையின் நீர்மட்டம் 84 அடியாக உயர்ந்தது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி.