கொல்கத்தா பர்துவான் மாவட்டத்தை சேர்ந்த ஹசிப் மல்லிக். 20 வயது இளைஞரான இவர் குமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஒரு மரமில்லில் வேலை பார்த்து வந்தார். கடந்த 24–ந் தேதி ஹசிப் மல்லிக் மற்றும் அவருடன் வேலை செய்த நண்பர்கள் குளச்சல் கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு கடற்கரை பகுதியை சுற்றிப்பார்த்த அவர்கள், மீன்பிடித்துறைமுகம் அருகில் உள்ள ஒரு பாறை மீது நின்று கடல் அழகை ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஹசிப் மல்லிக், அந்த பாறையின் அடிப்பகுதியில் இருக்கும் சிப்பி மீனை எடுப்பதற்காக கடலில் இறங்கினார். இதில் அவர் தவறி கடலில் விழுந்து மூழ்கினார்.
இது குறித்து குளச்சல் கடலோர காவல்படை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் – இன்ஸ்பெக்டர் ஜான் கிங்சிலி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் உள்ள மீனவர்களின் உதவியுடன் வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக தேடியும் ஹசிப் மல்லிக்கை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில், குளச்சல் கடலில் சுமார் 3 கடல்மைல் தூரத்தில் ஹசிப் மல்லிக்கின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதை அந்த வழியாக மீன்பிடிக்க சென்ற கட்டுமர மீனவர்கள் கண்டனர். உடனே, அவர்கள் வாலிபரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
அதனை போலீஸார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.