தூத்துக்குடி சம்பவத்துக்கு சில அரசியல் கட்சி பிரமுகர்கள் காரணம்

Forums Inmathi News தூத்துக்குடி சம்பவத்துக்கு சில அரசியல் கட்சி பிரமுகர்கள் காரணம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5537
  Kalyanaraman M
  Keymaster

  துத்துக்குடி சம்பவத்துக்கு சில அரசியல் கட்சி பிரமுகர்கள் காரணம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் குற்றம்சாட்டினார்.

  சட்டசபையில் நேற்று காவல்துறை மானியகோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசியதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

  ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டுமென்று முடிவெடுத்து, அதற்குண்டான நடவடிக்கை அம்மாவின்  அரசால் எடுக்கப்பட்டு வருகிறது.

  ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வேண்டுமென்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்ததை, அரசு மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றும்விதமாக, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கையை ஏற்றதன் அடிப்படையிலே 9.4.2018 அன்றே மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி கொடுக்க மறுத்து அவர்கள் விண்ணப்பத்தை ரத்து செய்துவிட்டது.

  விளம்பரம்

  14.4.2018 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர், அரசு எடுத்த நடவடிக்கை, தூத்துக்குடியில் இருக்கின்ற பத்திரிகைகளின் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டுவிட்டது, இது அனைவருக்கும் தெரியும்.

  மேலும், நடவடிக்கை ஒவ்வொன்றாகத்தான் எடுக்க முடியும். 2018-ம் ஆண்டு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி ரத்து செய்த பிறகு, ஸ்டெர்லைட் ஆலை எவ்வாறு இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக, மே மாதம், 18-ம் தேதி  அந்த ஆலைக்குச் சென்று அந்தக் குழு ஆய்வு செய்தது.

  குழு ஆய்வு

  அந்தக் குழுவின் ஆய்வின் அடிப்படையில், 2018-ம் ஆண்டு 23-ந் தேதியன்று அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  அரசியல் கட்சித் தலைவர்களும், அங்கிருக்கக்கூடிய மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றிவரும் இந்த நேரத்தில், இந்த அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டுமென்ற ஒரு எண்ணம் வருகின்றபொழுது, எங்கே இந்த அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடுமோ என்று சில அரசியல் கட்சி தலைவர்களும், சில அரசியல் கட்சி பிரமுகர்களும் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த செயலை செய்வதாக நான் எண்ணுகிறேன்.

  அரசுக்கு நெருக்கடி

  ஏனென்று சொன்னால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டுமென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும்பொழுது எதற்காக அங்கே போராட்டம்? தேவையில்லாமல், பிரச்சினையை உருவாக்கி இந்த அரசுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுத்து, இதன்மூலமாக அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறதோ என்று எண்ணத் தோணுகிறது.

  ஆகவே, எங்களைப் பொறுத்தவரைக்கும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படவேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை பற்றித்தான் நான் இங்கே குறிப்பிட்டோம்.

  பிரச்சினையை…

  எனவே, இதற்கு மேலும், வேண்டுமென்றே, தேவையில்லாமல் ஒரு பிரச்சினையை உருவாக்க வேண்டுமென்று கருதுவதுதான் தவறு என்று நான் இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விழைகிறேனே அல்லாமல், குற்றச்சாட்டு அல்ல.

  எனவே, நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதைத்தான் அரசும் செய்து கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையிலேதான், நாங்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குண்டான நடவடிக்கையை எடுத்திருக்கின்றோம்.

  தீர்மானம்

  தமிழகத்திலே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன, தொழிற்சாலைகள் இயங்குவதற்கான சட்டமும் இருக்கின்றது, அந்த சட்டம் அதனுடைய கடமையை செய்து கொண்டிருக்கின்றது.

  அந்த சட்டத்திற்குட்பட்டுத்தான் இந்த தொழிற்சாலை வருகின்றது.  ஆகவே, இன்றைக்கு இந்த தொழிற்சாலை மூடுவதற்குண்டான நடவடிக்கை சட்டபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கின்றது.

  ஆகவே, அமைச்சரவையை கூட்டி எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது.  அமைச்சரவை கூடினாலும், மீண்டும் முதலமைச்சருக்குத்தான் வரும், டெல்லிக்கு அனுப்ப முடியாது, இங்கேதான் வரும். அதுமட்டுமல்ல, இதையெல்லாம் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலே வாதம் வருகின்றபொழுது, எடுத்து வைத்தவுடன் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

  சட்டபூர்வ நடவடிக்கை

  ஆகவே, இன்றைக்கு 1 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன.  அனைத்திற்கு ம் பொதுவான சட்டம்தான், அது 5 கோடியில் இயங்கினாலும் சரி,  50 கோடியில் இயங்கினாலும் சரி, 5000 கோடியில் உருவாக்கப்பட்டிருந்தா லும் சரி, சட்டம் பொதுவானது.

  ஆகவே, இன்றைக்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அமைச்சரவை கூட்டி முடிவெடுக்க வேண்டியது அவசியம் இல்லை.  சட்ட பூர்வமாக அனைத்து மூத்த அதிகாரிகளை அழைத்துப் பேசி, சட்ட நிபுணர்களை அழைத்துப் பேசி, அதற்குப் பிறகுதான் அரசு ஒரு முடிவை எடுத்து அறிவித்திருக்கின்றது.

  இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This