ஆளுனரின் அரிக்கைக்கு வைக்கோ கண்டணம்

Forums Inmathi News ஆளுனரின் அரிக்கைக்கு வைக்கோ கண்டணம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5473

  ஆங்கிலேய ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்தை விடுவிக்க ஈடற்ற தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. சமூக நீதி ஒளிவிளக்கின் வெளிச்சத்தை இந்திய நாட்டுக்கு வழங்கியது, தமிழகத்தில் வேர் ஊன்றியுள்ள திராவிட இயக்கம்தான்.

  இந்தப் பெருமைமிகு மாநிலத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்ற நாளிலிருந்து இங்கே நடைபெறும் மாநில அரசைத் துச்சமாகக் கருதி, உதாசீனம் செய்வதும், மாவட்ட வாரியாக அதிகார உலா செல்வதும், அமைச்சர்களைக் கூட அரங்கத்திற்குள் அனுமதிக்காமல், அதிகாரிகளை அழைத்து விவாதிப்பதும் அவரது அதிகார எல்லையைக் கடந்த செயலாகும்.

  அமெரிக்க நாட்டில்தான் மாநில ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. அத்தகைய அதிகாரம் இந்தியாவில் இல்லை என்பதை ஆளுநர் புரோகித் உணர வேண்டும்.

  இதுவரை தமிழகத்தில் ஆளுநர்கள் பின்பற்றி வந்த மரபுகள், நடைமுறைகள் அனைத்தையும் மீறி வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் போக்கினைக் கண்டித்து, இந்திய அரசியல் சட்டம் வழங்கி உள்ள ஜனநாயக உரிமையின் அடிப்படையில், திராவிட முன்னேற்றக் கழகம் அமைதி வழியில் கறுப்புக்கொடி அறப்போர் நடத்தி வருகிறது.

  இதனால் ஆத்திரம் அடைந்த ஆளுநர், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 124 ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் சிறையில் அடைப்போம் என்று மிரட்டிப் பார்க்கிறார். இங்கே நடப்பது ஆளுநர் ஆட்சி அல்ல.

  கொடூரமான நெருக்கடி நிலை அவசரச் சட்டத்தின் தாக்குதலையும், சிறைவாசத்தையும் அஞ்சாது எதிர்கொண்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

  தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்ற காலங்களில்கூட, ஆளுநர்கள் இப்படி மாவட்ட வாரியாக வீதி உலா சென்றதும், அதிகார பேட்டிகள் தந்ததும் இல்லை.

  சட்டப் பிரிவைச் சுட்டிக் காட்டும் ஆளுநருக்கு நான் விடுக்கும் கேள்வி, தமிழ்நாட்டின் தொழில்முனைவோர்கள் தன்னைச் சந்திக்கலாம் என்று அழைப்பு விடுத்தாரே, இதற்கான அதிகாரம் ஆளுநருக்கு எந்தச் சட்டப் பிரிவின் கீழ் இருக்கிறது?

  அதனால்தான் நான் பொதுமேடைகளில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தா? அல்லது தொழில்முனைவோர்களின் புரோக்கரா? என்று கேட்டேன்.

  ஒரு மாபெரும் இயக்கத்தின் செயல் தலைவர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குறித்து ஆளுநர் அறிக்கையில் பயன்படுத்தி இருக்கின்ற ‘அறியாமை’ என்ற சொல், அவரின் ஆணவத்தையும், அதிகாரம் இருப்பதாகக் கருதிக்கொள்ளும் மமதையையும், திமிரையும் காட்டுகிறது.

  ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளில் பவனிவந்த பன்வாரிலால் புரோகித்தின் மிரட்டலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

  இத்துடன் தனது வரம்பு மீறிய மிரட்டல் போக்கையும், நடவடிக்கைகளையும் ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  மத்திய பா.ஜ.க. அரசு ஆளுநரைக் கொண்டு தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்த முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  *வைகோ*
  பொதுச் செயலாளர்,
  மறுமலர்ச்சி தி.மு.க.
  ‘தாயகம்’
  சென்னை – 8
  25.06.2018

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This