கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை களைவது, கடத்தல் பேர்வழிகள், வெளிநாட்டு நபர்களின் ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கடலோர காவல் குழும போலீசார் ரோந்து பணியின் போது கண்டறிவார்கள். இதற்காக, தமிழக அரசு தலா ரூ.1. கோடி மதிப்புள்ள 2 அதிநவீன ரோந்து படகுகளை நாகை கடலோர காவல் குழுமத்திற்கு வழங்கி உள்ளது.
பொதுவாக, கடலில் மீன்பிடிக்கும்போது கடலில் விழுந்து மீனவர்கள் காணாமல் போனால், மீனவர்கள் கடலோர காவல் குழும போலீசாருக்கு வயர்லெஸ் மூலமோ அல்லது செல்போன் மூலமோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பார்கள். அந்த தகவல்களினடிப்படையில், இத்தகைய, அதிநவீன ரோந்து படகில் மீனவர்கள் தெரிவித்த திசை நோக்கி செல்லும் கடலோர காவல் குழும போலீசார் கடலில் முழ்கிய மீனவரை கண்டறிந்து கரை சேர்ப்பார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த 2 அதிநவீன படகுகளும் நாகை மாவட்டத்தில் தற்போது பழுதாகி நிற்கின்றன.
இதனால் கடலோர காவல் குழும போலீசார் மீனவர்களின் விசைப்படகை வாடகைக்கு எடுத்து கடலுக்கு சென்று பணியாற்றி வருகிறார்கள். தேவையற்ற இந்த செலவால் கடலோர காவல் குழும போலீசார் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறனர். நாகை துறைமுக வளாகத்தில் கடுவையாற்று அருகில் உள்ள சிமிண்ட் தளத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக 2 அதிநவீன ரோந்து படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.