இரயிலத்துறை அமைச்சர் பியுஷ் கோயலுடன் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு

Forums Inmathi News இரயிலத்துறை அமைச்சர் பியுஷ் கோயலுடன் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #5302

  இந்தியத் இரயில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று சந்தித்து தமிழகத்திற்கான இரயில் திட்டங்கள் குறித்து பேசினார்.

  தருமபுரி & மொரப்பூர் இரயில் திட்டம் இரயில்துறை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாததையும், அடிக்கல் நாட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாததையும் அமைச்சரிடம் அன்புமணி இராமதாஸ் சுட்டிக் காட்டினார். ‘‘சென்னை நகரையும் தருமபுரியையும் நேரடியாக இணைக்கும் மிக முக்கியமான திட்டம் இதுவாகும். இத்திட்டம் நிறைவேற்றினால் தருமபுரி மக்கள் எளிமையாக சென்று வர ஏதுவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வர்த்தக ரீதியாகவும் பயன்பெறுவார்கள், பொருளாதாரம் வளர்ச்சி பெறும்’’ என்று குறிப்பிட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இத்திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

  அதேபோல், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் ஆகியவை இரு மார்க்கங்களிலும் பொம்மிடி தொடர்வண்டி நிலையத்திலும், பாலக்காடு எக்ஸ்பிரஸ் மொரப்பூர் சந்திப்பிலும், எர்ணாக்குளம்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் பாலக்கோடு சந்திப்பிலும் நின்று செல்ல ஆணையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

  சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்தியோதயா எக்ஸ்பிரஸ் கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

  திண்டிவனம் – நகரி, அத்திப்பட்டு – புதூர், ஆவடி – திருப்பெரும்புதூர் – கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு – விழுப்புரம் ஆகிய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் அந்தத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அன்புமணி இராமதாஸ், அத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

  சென்னை – மாமல்லபுரம் – கடலூர் வழியாக இப்போதிருக்கும் பாதைகளை இணைத்து தூத்துக்குடி வரை கிழக்குக் கடற்கரை சாலை அமைக்கும் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும்படி கோரினார். கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட அமைச்சர் கோயல், அவற்றை ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This