ராமேசுவரம் பகுதியில் தொடர்ந்து சூறாவளி காற்று வீசிவருகிறது. இதனைத்தொடர்ந்து, புயலால் அழிந்து போன தனுஷ்கோடி பகுதியிலும் சூறாவளி காற்று வீசியதுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை வரையிலும் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று கம்பிப்பாடு கடற்கரையிலேயே அனைத்து சுற்றுலா வகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருப்பதை தடுக்கும் வகையில் கடலோர போலீசாரும் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று, எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி இறங்குதளத்தை தாண்டி கடல் அலைகள் சுமார் 25 அடி உயரம் வரை சீறி எழுந்தன. இதனால் தனுஷ்கோடி சாலை பல இடங்களில் மணலால் மூடப்பட்டு காட்சியளித்தது.
பாம்பன் பாலம் உள்ள பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் மதுரையில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு ராமேசுவரம் வந்து சேர வேண்டிய பயணிகள் ரெயில் மண்டபம் ரெயில்வே நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.