ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்கும் படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் இந்தியாவிற்கு திரும்பவோ அல்லது, தொடர்ந்து மீன் பிடிக்கவோ அனுமதிக்கப்படாமல் ஈரானில் தடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்கள் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக, ஈரானை சேர்ந்தவரான முகம்மது சல்லா என்பவருக்கு சொந்தமான 3 படகுகளில் மீன் பிடித் தொழிலை செய்து வந்தனர். இந்த 21 மீனவர்களில் 8 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 7 பேர் திருநெல்வேலி மாவட்டத்தையும், 6 பேர் தூத்துக்குடி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.
இதனிடையே, ஈரானிய முதலாளி, பேசிய படி அவர்களுக்கு சம்பளத் தொகையை வழங்கவில்லை. இதனால் இந்த மீனவர்கள், பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதுடன், வீட்டிற்கு பணம் அனுப்ப இயலாத நிலையிலும் உள்ளனர். நியாயமான சம்பளம் தங்கள் முதலாளியிடம் கேட்ட போது கிடைக்காத நிலையில், தங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும்படி கேட்டுள்ளனர். ஆனால், முதலாளிகள் அதனை மறுத்துவிட்டனர். தற்போது, அவர்கள் பாஸ்போர்ட்டுகள், அந்த முதலாளிகள் கையில் உள்ளதாகவும், அவர்கள் இந்தியாவிற்கு திரும்பி வர, அனுமதிக்காமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, அந்த முதலாளிகள், இந்த தொழிலாளிகள், தங்குவதற்கான இடத்திலிருந்து வெளியே தள்ளி, நடுத்தெருவில் விட்டுவிட்டதாகவும், இதனால் தங்க உணவோ அல்லது பாதுகாப்பு எதுவுமின்றி அவர்கள் வெளியில் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே, இந்த மீனவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதத்தையும், அவர்கள் சம்பள பாக்கியை மீண்டும் பெற்றுக் கொடுத்து, அவர்களை இந்தியாவிற்கு திரும்ப உதவும் படியும் இந்திய தூதரகத்திற்கு அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.