திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச்சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவர், ஏரோநாடிகல் என்ஜினியரிங் படிப்பை முடித்து கை நிறைய சம்பளம் வாங்கும் என்ஜினியராகத் தன் வாழ்க்கையை தொடராமல், இயற்கை விவசாயத்துக்கு திரும்பினார். இயற்கை விவசாயத்தை முகநூல் வழியாக பலருக்கு சொல்லிக்கொடுத்துள்ளார். சென்னை, திருநெல்வேலி, திருச்சி உள்பட பல இடங்களுக்குச் சென்று மாடித்தோட்டம் அமைக்கக் கற்றுக்கொடுக்கிறார்.
சரி, எனக்கும் மாடித் தோட்டம் போட வேண்டும்… அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் அனைவருக்கும் இப்படி பதில் சொல்கிறார். ‘’400 சதுர அடி மாடித் தோட்டத்தை அமைக்க 15,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாய் வரை செலவு ஆகும். முதலில் செலவு செய்து அமைக்கப்படும் தோட்டத்தில் நான்கு பேர் அடங்கிய குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை பெற முடியும்’’ என்கிறார் பரமேஸ்வரன்.
‘’முதலில் எனக்கும் விவசாயம் குறித்து அதிகம் தெரியவில்லை. இயற்கை விவசாயத்தைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நம்மாழ்வாரின் வானகம் பயிற்சி மையத்தில் சேர்ந்து பல அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இன்று அதன் மூலம் பலருக்கு பயிற்சி அளிக்கிறேன். பயிற்சி அளிக்க முடியதஹ பட்சத்தில் நான் கற்றுக்கொண்ட இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்கிறேன்’’ என்கிறார் பரமேஸ்வரன்.
குறிப்பாக வீட்டு மொட்டை மாடியில் பிளாஸ்டிக் தொட்டிகளை வைத்து அதில் பல்வேறு வகையான அவரைக்காய், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், கீரை, பூக்கள் என பயிரிட பயிற்சியளிக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல்வேறு செடிகளின் நாட்டு விதைகளை விற்பனை செய்கிறார். அனைத்தும் இயற்கை விவசாயத்தின் மூலம் பயிர் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கிறார்.
மேலும், வசதி படைத்தவர்கள் மட்டும் தான் வீட்டுத் தோட்டம் போட முடியும் என்பது பொய். எளிய மக்களும் தாங்கள் விரும்பிய படி வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைக்கலாம் என நம்பிக்கையளிக்கிறார் பரமேஸ்வரன்.
இயற்கை வேளாண்மை குறித்த சந்தேகங்களுக்கு தன் முகநூல் வழியாக பதில் அளிக்கிறார் பரமேஸ்வரன். நீங்க தோட்டம் போட ரெடியாகிட்டீங்களா?