கச்ச நத்தம் கிராமத்தில் நடந்தேறிய படுகொலைகள் பற்றிய கள ஆய்வறிக்கை.

Forums Inmathi News கச்ச நத்தம் கிராமத்தில் நடந்தேறிய படுகொலைகள் பற்றிய கள ஆய்வறிக்கை.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #4180
  Nandha Kumaran
  Participant

  கச்ச நத்தம் கிராமத்தில் நடந்தேறிய படுகொலைகள் பற்றிய கள ஆய்வறிக்கை.

  28.05.2018 அன்று சிவகெங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கச்சநத்தம் கிராமத்தில் சாதி வெறியர்களால் 3 பேர் படுகொலை செய்யப்பட்டும், 6 பேர் கொடுமையாவும் வெட்டப்பட்டனர் என்ற செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படுகொலைகள் தொடர்பாக மதுரை மாவட்டத்தில் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் முன்னெடுப்பில் ஆறு பல்வேறு அமைப்புக்களை ஒருங்கினைத்து, “கச்சநத்தம் படுகொலைகள் குறித்த உண்மையறியும் குழு, பேராசிரியர். இரா.முரளி, மாநிலப் பொதுச்செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு
  13-06-18 அன்று கள ஆய்வு நடத்தியதில் கண்டறியப்பட்ட தகவல்களையும், குழுவின் பரிந்துரைகளையும் இப்பத்திரிக்கை அறிக்கையில் சுருக்கமாக முன் வைக்கிறோம்.

  உண்மையறியும் குழுவில் பங்கேற்றவர்கள்

  1. பேரா.இரா.முரளி (மக்கள் சிவில் உரிமைக் கழகம் – பி.யு.சி.எல்.)
  2. வழக்கறிஞர். இரஜேந்திரன் (சமநீதி வழக்கறிஞர் சங்கம்)
  3. வழக்கறிஞர்.இராஜா (குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம்)
  4. வழக்கறிஞர்.ஆ.இராஜா (விடுதலை சட்ட மையம்)
  5. வழக்கறிஞர். முத்துக்கிருஷ்ணன்
  6. செல்வி.பி.கண்மணி (மக்கள் சிவில் உரிமைக் கழகம்)
  7. செல்வி. குறிஞ்சித்தேன் (மாணவர் பொதுநல இயக்கம்)
  8. திருமதி. மீனாட்சி (பெண்கள் எழுச்சி இயக்கம்)
  9. திரு. முத்துப்பாண்டி (சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி)
  இக்குழுவினர் அப்பகுதியில் உள்ள பாதிக்கபட்ட மக்கள், அப்பகுதி தலையாரி, காவல்துறை துணை கண்காணிப்பாளர், அங்கே வசித்துவரும் அகமுடையார் சமுதாயக் குடும்பம், வெட்டப்பட்டு மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள், என எல்லா தரப்புகளுடனும் உரையாடி தரவுகளைப் பெற்றது.

  பின்னணி
  சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களில் ஒன்றுதான் கச்சநத்தம் கிராமம். திருப்பாச்சேத்தியிலிருந்து 5 கிலே மீட்டர் தூரத்தில் உள்ள பழையனூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கிராமம் இது. இக்கிராமத்தில் சுமார் 40 தேவேந்திர குல வேளாளர் குடும்பங்களும், 3 அகமுடையார் குடும்பங்களும் வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் தேவேந்திர குல வேளாளர்கள் அனைவருமே சொந்த நிலங்கள் வைத்துள்ளனர். பெரும்பாலன குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்றவர்களாகவும், அரசுப் பணியிலும் இருக்கின்றனர். கச்சநத்தம் கிராமத்தில் 3 அகமுடையார் குடும்பங்கள் மட்டுமே இருப்பினும், அவர்களுடைய உறவினர்கள் கச்சந்தத்தம் கிராமத்தைச் சுற்றியுள்ள மாரநாடு, ஆவரங்கோடு போன்ற பிற கிராமப் பகுதிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாழ்கின்றனர். கச்சந்தத்தம் பகுதி அகமுடையார் இளைஞர்கள் சரியான கல்வியின்றியும், வேலையின்றியும் மேலும் கஞ்சா, மது போன்ற போதை பழக்கத்திற்குட்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் அவ்வப்போது தேவேந்திர குல வேளாளர் மக்களை வம்புக்கிழுத்து வந்துள்ளனர்.
  கடந்த மூன்று வருடங்களாகவே அகமுடையார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர்களுடன் அவ்வப்போது பிரச்சினை செய்து வந்துள்ளார்கள். அச்சமயத்திலெல்லாம் பழையனூர் காவல் நிலையத்தில் சமரசம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வயதைவிட அதிகமான தேவேந்திரகுல முதியவர்களை “வாடா..போடா” என மரியாதை இன்றி அழைக்கும் போக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதில் படித்த தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் முரண்பட்டு எதிர்க்கும் போதெல்லாம் பிரச்சினை வந்துள்ளது. இதற்கு முன்பு பலமுறை வன் கொடுமை நடந்ததற்கான புகார்கள் காவல் நிலையத்தில் கொடுக்க்ப்பட்டுள்ளன.
  கச்சநத்தத்தினை சுற்றியுள்ள கிராமங்களில் அகமுடையார் சமூக மக்கள்
  பெரும்பான்மையாக வாழும் தைரியத்தில் கச்சநத்ததில் வாழும் சந்திரகுமார்,சின்னு மற்றும் ராஜாங்கம் ஆகியோர் அவ்வப்போது, கச்சநத்தம் தேவேந்திர குல வேளாளர்கள் சமூக மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். தங்களுடைய வயலுக்கு வேலைக்கு வரவில்லை எனில் சாதியின் பெயரைச் சொல்லி அடிப்பது, அம்மக்களின் ஆடு, கோழிகளை திருடித் திண்பது, பெண்கள் குளிக்கும் பகுதியில் ஆபாசமாக நடந்து கொள்வது, ஆளில்லாத வீட்டில் சாராயம் குடிப்பது, குடிதண்ணீர் பிடிக்கும் குழாயடிகளில் தங்களுக்கு முன்னுரிமை தராவிட்டால் சாதியின் பெயரால் ஆபசமாகத் திட்டுவது போன்றவை அன்றாட நிகழ்வுகளாக இங்கே இருந்திருக்கின்றன. இப்பகுதியில் உள்ள நஞ்சை நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் மாரநாடுக் கண்மயிலிருந்துதான் வரவேண்டும். அப்படி வரும்போது, அகமுடையார் நிலங்களுக்குப் பாய்ந்தது போகத்தான் இவர்களுக்கு தண்ணீர் விடப்படுமாம். கண்மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது என்றாலும், நடைமுறையில் அது சாதி ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. பிரச்சினைகள் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் அச்சம். காரணம் காவல் நிலையங்களில் பெரும்பாலும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்க்ளே இருக்கின்றனர். அப்படியே கொடுத்தாலும் பெரிய அளவில் பலன் இல்லை. மாறாக தொடர் மிரட்டல்கள் கிடைக்கின்றன. எனவே தங்களின் விதி இது என்று விலகியே சென்றுள்ளனர் தேவேந்திர குல வேளாளர்கள். தாங்கள் எந்த நிலையிலும் அச்சத்தினால் உயர்சாதி மக்களுடன் முரண்பட்டு சண்டைக்குப் போவதில்லை என்று அனைவருமே கூறினர்.

  சம்பவம்
  27-05-2018 அன்று சனிக்கிழமை மதியம் 01:00 மணியளவில் கச்சநத்தத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் தெய்வேந்திரனும், காவல் துறையில் பணியாற்றும் பிரபாகரனும் பொது இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, சுமன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். மிகவும் அதிகமான வேகத்தில் அவர் சென்றதைப் பார்த்து, “யாரடா இவன் இவ்வளவு வேகமாக போறான்” என இவர்கள் பேசியதைக் கேட்டு வண்டியை நிறுத்திவிட்டு வந்த சுமன் இவர்களின் சாதியின் பெயரைச் சொல்லி கேவலமாக திட்டி, என்னை ‘டா’ என்றழைக்கும் அளவிற்கு திமிர் வந்துவிட்டாதாடா உங்களுக்கு என்று சத்தமாக கத்திவிட்டு, மிக அருகில் இருந்த தன் வீட்டுக்குச் சென்று வேல்கம்பு, போன்ற ஆயுதங்களை எடுத்து வந்து தாக்க வந்துள்ளார். அங்கிருந்து தப்பி ஒடிய தெய்வேந்திரனும், பிரபாகரனும் திருப்பாச்சேத்தி காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று புகார் கொடுத்தனர். உடனே காவல் துறையினர் ஊருக்குள் வந்து சுமன் வீட்டிற்குச் சென்றனர். அங்கு சுமன் இல்லாததால், சுமனின் தந்தை சந்திர குமாரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கண்டித்து அனுப்பியுள்ளனர். இதனால் கடும் கோபம் கொண்ட சந்திரகுமாரின் மகன்களான சுமன் மற்றும் அருண் ஆகிய இருவரும் சுமார் முப்பதுக்கும் மேற்ப்பட்ட தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களை அழைத்துக் கொண்டு 28-05-18 அன்று இரவு 9 மணி அளவில் இராணுவ வீரர் தெய்வேந்திரன் வீட்டில் புகுந்து அவரைத் தாக்குவதற்காக தேடியுள்ளனர். அவர் அங்கு இல்லாததால் அவரின் தந்தை ஆறுமுகத்தை வெட்டி அங்கேயே கொன்றுள்ளனர்.
  தெய்வேந்திரன் அடுத்த வாரம் நடக்க இருந்த தன் திருமணத்திற்காக வைத்திருந்த ரூபாய் 3,20,000 பணமும் 35 பவுன் நகையும் காணவில்லை என பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். யாரும் அவர் வீட்டில் இல்லாததால் வீட்டை உடைத்து புகுந்து, வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, பிரிட்ஜ் உட்பட பல சாமான்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அடுத்து எதிரில் இருந்த தனசேகர் வீட்டில் நுழைந்த வன்முறை கும்பல் அங்கிருந்த சுகுமாறன், தனசேகர், தெய்வேந்திரன் (வேறு நபர்) ஆகியேரை வாளால் வெட்டி கொடுங்காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
  தெரு விளக்குகளுக்கான மெயின் ஸ்விட்சை அனைத்து விட்டு வீடுகளின் கதவைத்தட்டி தாக்குதல் நடத்த ஆட்களைத் தேடியுள்ளனர். சில வீடுகளில் தங்களுடன் வந்த பெண்களை விட்டு கதவைத் தட்ட சொல்லிருக்கின்றனர். பெண்களும் வன்முறை சம்பவத்தில் உதவி புரிந்து இருக்கின்றனர்.
  இதனிடையே மற்றொரு பிரிவினர் அறிவழகன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் நுழைந்து அங்கே இருந்த சண்முகநாதன் மற்றும் சந்திரசேகர் ஆகியோரை வெட்டி சாய்த்துள்ளனர். மலைச்சாமி என்பவருக்கு கொடும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர். சண்முகநாதன் என்பவர் எம்.பி.ஏ படித்துவிட்டு கிராமத்தில் உள்ள தன் இன மக்களை மேம்படுத்தும் பல் வகை சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி, இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்துள்ளார்.
  விவசாயத்துக்கு தேவையான டிராக்டர், உழுகருவிகள், போன்றவற்றை சொந்தமாக வாங்கி தம் மக்களுக்கு அதை விவசாயத்திற்குப் பயன் படுத்த கொடுத்துள்ளார். அவர் இத்தாக்குதலில் அந்த இடத்திலேயே அவர் சரிந்து விழுந்து சில மணி நேரத்தில் இறந்துள்ளார்.
  இந்த குரூரத்தாக்குதல் குறித்து பழையனூர் காவல் நிலையத்திற்கு தொலை பேசி மூலம் மக்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். ஆனால் மிகவும் தாமதமாகவே கவல் துறையினர் வந்திருக்கின்றனர். சுமார் ஒண்ணரை மணி நேரம் கழித்துதான் ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. இறந்து போனவர் தவிர தாக்குதலால் காயப்பட்ட குற்றுயிரும், குலையிருமாகக் கிடந்த மற்றவர்கள் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
  சந்திரசேகர் என்பவர் அரசு மருத்துவமணையில் இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பின் இறந்திருக்கிறார். படுகொலையான சந்திர சேகரின் இணையர் தவமணி தன்னுடைய கணவருக்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் முறையாக மருத்துவம் பார்க்கப்படவில்லை என்றும், இரத்தம் இழந்ததற்கு இரத்தம் ஏற்ற முயலவே இல்லை என்றும், மேலும் ஸ்கேன் கூட எடுக்கவில்லை என்றும் குறை கூறிய அவர் ஒரு நர்சிங் படிப்பு படித்தவர். தன் கணவன் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் பிழைத்திருப்பார், அவர் இறப்பிற்கு மருத்துவமணையின் அலட்சியப்போக்கே காரணம் என்றார். வேறு தனியார் மருத்துவமனையில் தன் கணவரை சேர்க்க காவல் துறையும் அனுமதிக்க வில்லை என குற்றம் சாட்டினார். சந்திரசேகர் மருத்துவமமையிலேயே உயிர் நீத்ததால், அச்சமுற்ற அரசு மிச்சமுள்ள சுகுமாரன், மலைச்சாமி மற்றும் மகேஸ்வரன் ஆகிய மூன்று பேரை தனியார் மருத்துவமனையாகிய மீனாட்சி மருத்துவ மனையில் சேர்த்துள்ளது. இந்த மூவருக்கும் பலத்த வெட்டுக்கயங்கள். ஆறுவதற்கு பல மாதங்கள் ஆகும். அங்கும் கூட அரசிடம் இருந்து மருத்துவ செலவிற்கான தொகை சரியாக வராததால், அம்மூவரையும் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவ மனை நிர்வாகம் நெருக்குகிறதாம்.
  இப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்களும், இருபது மாணவர்களும் உள்ளனர். அவர்கள் பல சாதியினர். அக்கம் பக்கம் ஊர்களில் இருந்து வருகின்றனர். இச்சம்பவத்திற்குப் பின் ஒரு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வருகிறார். பிற மாணவர்கள் அச்சத்தினால் வருவதில்லை. மாணவர்கள் வருகையின்மை காரணமாக பள்ளி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
  தொடர்ந்து அப்பகுதி தேவேந்திர குல வேளாளர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதின் விளைவாக இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை பத்து இலட்சத்திலிருந்து பதினைந்து இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  மானமதுரை காவல் துனை கண்காணிப்பாளர் வீ. சுகுமாரனை சந்தித்தபோது அவர், செல்வம் மற்றும் ஜானகிராமன் ஆகிய இரண்டு காவல் உதவி ஆய்வளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார். இருபதுக்கும்
  மேற்பட்டவர்கள் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் பத்து பேருக்கு மேல் கைது செய்யப்படவேண்டியுள்ளதாகவும். பலர் மீது குண்டாஸ் வழக்கு போடவிருப்பதாகவும் கூறினார். அப்பகுதி முழுவதும் போலிசால் குவிக்கப்பட்டுள்ளது. எதேனும் வன்முறை சம்பவம் மறுபடி நிகழ்ந்து விடும் என்ற அச்சம் அப்பகுதி வாழ் தேவந்திர குல வேளாளர்களுக்கு உள்ளது. பயத்துடனும், இழப்புடனும், வலியுடனும், அச்சத்துடனும், அப்பகுதி மக்கள் ஒவ்வொரு நாளையும் கழித்து வருகின்றனர். இதற்கிடையே, இறந்தவர்கள் குடும்பத்தில் வீட்டிற்கு ஒருவருக்கு பணி வாய்ப்பு வழங்குவதாக அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது.

  அவதானிப்புகள்:
  கச்சசநத்தம் படுகொலைகள் சாதியத்தின் கொடூர முகத்தைக் காட்டுகின்றன.
  பன்னெடுங்காலமாக அடிமைப் பட்ட ஒரு சமூகத்தின் இளையதலைமுறை தற்போது தங்களை சற்று மேம்படுத்திக் கொண்டு, சுய மரியாதையோடு வாழ முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாத ஆதிக்க சாதியினரின் ஒரு பகுதியினர் இம்மாதிரி வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடுவோரை அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த பெரியோர்கள் கண்டிப்பதற்கு பதிலாக துணை நிற்கின்றனர். இதில் ஆதிக்க சாதி பெண்களும் வன்முறைக்கு துணை நிற்பது என்பது சாதீயத்தின் வேர்கள் எவ்வளவு தூரம் பரவியுள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இம்மாதிரி சமயங்ககளில் காவல் துறையினரின் அலட்சியப் போக்கிற்கும் முக்கிய காரணம் சாதிய உணர்வே ஆகும். தாழ்த்தப்பட்ட மக்களின் இழப்பு என்பதும் சுய மரியாதைக்கு பங்கம் என்பதும் முக்கியமானதாக கருத்தில் எடுக்கப்படுவதில்லை. இப்படுகொலைகள் தங்கள் சாதியின் உயர்வை நிலைநாட்டவே செய்யப்பட்டுள்ளன. நாகரீக சமுதாயம் வெட்கி தலை குனியவேண்டிய சம்பவம் தான் இப்படுகொலை தாக்குதல். இக்கருத்துடன் கீழ் கண்ட கோரிக்கைகளை உண்மையறியும் குழு அரசின் முன் வைக்கின்றது.
  கோரிக்கைகளும், பரிந்துரைகளும்:
  1. மானாமதுரையை வன் கொடுமையால் பாதிக்கபட்ட மாவட்டமாக அறிவிக்கவேண்டும்.
  2. இப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள பல தரப்பினரையும் அழைத்து சமாதான உரையாடல்கள் நடத்தி எந்த ஒரு சாதியினரும் அச்சமின்றி வாழ்க்கை நடத்த வழி செய்ய வேண்டும். இந்த சமாதனக் கூட்டம் சமூக அக்கறையளர்களை அழைத்து மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப் பெறவேண்டும்.
  3. இச்சம்பவத்தை தடுக்கத் தவறிய கவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.
  4. கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மூடப்படமல் தொடர்ந்து செயல்பட, குழந்தைகளை அச்சமின்றி பள்ளிக்கு வரவழைக்க அரசு அவர்களுக்கு நம்பிக்கையையும், சூழலையும் உருவாக்க வேண்டும்.
  5. இறந்தவர்கள் மட்டுமின்றி பலத்த காயப்பட்ட அனைத்து குடும்பத்தினருக்கும் அரசு உடனடியாக தரமான பணிக்கான ஆணை வழங்க வேண்டும்.
  6. காயம் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை அவர்கள் பூர்ண குணமடையும் வரை அரசு செலவிலேயேத் தரப்படவேண்டும்.
  7. மீனாட்சி மருத்துவ மனையும் இவர்களுக்கு தரமான சிகிச்சையை இலவசமாக வழங்குவது பற்றி யோசிக்கவேண்டும்.
  8. கொலை காரர்களைப் பிணையில் விடுவிக்காமல், வழக்கு விசாரணையை விரைவாக முடிப்பதற்கு வசதியாக சிறப்பு நீதி மன்றத்தை நியமிக்கவேண்டும். அதற்கு அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரும் நியமிக்கப்பட வேண்டும்.
  9. இவ்வழக்கின் காவல்துறை விசாரணையை உயர் நீதி மன்றத்தின் கண்காணிப்பில் நடத்த அரசு உத்திரவிட வேண்டும்.
  10. பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் அவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புது வீடுகள் கட்டித்தரவேண்டும்.
  11. கச்ச நத்ததில் நிரந்தர காவல் நிலையம் மற்றும் ஒரு சிறு மருத்துவ மனை அமைக்கவேண்டும்.
  12. தமிழகத்தில் குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தாமல், பல சாதியை சேர்ந்த காவலர்கள் நியமிக்கப்படவண்டும்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This