கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கேரள வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. 100 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 98 அடிக்கும் மேல் நிரம்பி வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு பில்லூர் அணை முழுவதுமாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, அதன் நான்கு மதகுகளும் திறந்து விடப்பட்டன. அணையின் நான்கு மதகுகள் வழியாக தற்போது வினாடிக்கு 16,000 கன அடி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.