அரசு ஊழியர் காலவரையற்ற உண்ணாவிரதம் – சட்டமன்றத்தில் துணை முதல்வர் விளக்கம்

Forums Inmathi News அரசு ஊழியர் காலவரையற்ற உண்ணாவிரதம் – சட்டமன்றத்தில் துணை முதல்வர் விளக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #3850
    Nandha Kumaran
    Participant

    அரசு ஊழியர் அமைப்பான ஜேக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி ஆகியோர் கொண்டு வந்தனர்.

    அதில் பேசிய முக ஸ்டாலின், புதிய பென்ஷன் திட்டத்தை மாற்றி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முயல்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காக அவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்றார்.

    இதற்கு பதிலளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது,

    கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டு, மாநில அரசின் வரி வருவாய் வெகுவாக குறைந்துள்ள போதிலும், அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் துடிப்புடம் இயங்க வேண்டும் என்பதால் தான் பிற மாநிலங்களைப் போல் அல்லாமல், தமிழ்நாட்டில் அகவிலைப் படி உயர்வு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்காலம் 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. வீட்டுவசதி கடன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பணிக்கொடையை 20 இலட்சம் ரூபாயாக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. உரிய நேரத்தில் சம்பளம் உயர்வு வழங்கும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
    அந்தக் குழுவின் பரிந்துரைகளை மிகக் குறுகிய காலத்தில் பெற்று 1-10-2017 அன்று முதல் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியக் குழு பரிந்துரைகளை, அமல்படுத்தி தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்த சம்பள உயர்வினால் தமிழ்நாடு அரசுக்கு ஒரே ஆண்டில் 14,719 கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்பட்டாலும்கூட, அரசு ஊழியர்களின் நலன்கருதி, மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு, ஊதியக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அமல்படுத்தியுள்ளது. 2017-2018 ஆம் ஆண்டில் மாநில அரசு பெற்ற மொத்த வரிவருவாய் 93,795 கோடி ரூபாயாகும். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்திற்காக மட்டும் அரசு செலவு செய்த தொகை 45,006 கோடி ரூபாயாகும். இது தவிர, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகை 20,397 கோடி ரூபாய் என மொத்தம் 65,403 கோடி ரூபாயை, நிருவாகத்தை நடத்தும் அரசு ஊழியர்களுக்கு ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த வரிவருவாயில் சுமார் 70 சதவிகிதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக பெற்றுள்ள கடனுக்கான வட்டி செலவு 24 சதவிகிதம். மீதமுள்ள 6 சதவிகிதம் மாநில வரிவருவாயுடன் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வரிபகிர்வு உள்பட 41,600 கோடி ரூபாயைக் கொண்டுதான் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களின் நலன்கருதி, உட்கட்டமைப்பு பணிகள், வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக வெளிச்சந்தையிலும் கடன்பெற்று, அத்திட்டங்களை சிறப்பாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையிலும் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது வழங்கப்பட்டுவரும் சலுகைகள் எதுவும் குறைக்கப்படவில்லை. பொது மக்களுக்கான திட்டங்களை, நலத் திட்டங்களை, தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் அரசு இருக்கிறது. அத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் அரசு ஊழியர்களும் இருக்கின்றார்கள். அவ்வாறு இருக்கும்போது, அரசின் வருவாயில் நிருவாகச் செலவு என்பது மிக அதிகமாக இருந்தால், திட்டங்களுக்கு நிதி ஒதுக்க இயலாது. இதை பொறுப்புணர்வுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் நன்கு அறிவார்கள். அரசு ஊழியர்கள் இந்த உணர்வுடன் செயல்பட்டால்தான் ஒரு நல்லாட்சியை வழங்கி (மேசையைத் தட்டும் ஒலி) பொது மக்களுக்கு நாம் அனைவரும் ஒன்றுகூடி நன்மை செய்ய முடியும். ஊதிய உயர்வு வழங்கப்பட்ட பின்பு, அதில் முரண்பாடுகள் ஏதேனும் இருப்பினும் அதையும் சரிசெய்ய மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களிடமிருந்து குறைகளை கேட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, ஆராய அமைக்கப்பட்ட குழுவும் விரைவில் அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. இதை அனைத்து அரசு ஊழியர்களும் நன்கு அறிவார்கள். அனைத்து ஊழியர் சங்கங்களும் நன்கு அறியும். பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டுமென்று சொல்லப்படுகின்ற நிலையில் இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களும் புதிய சிஷீஸீtக்ஷீவீதீutவீஷீஸீ றிமீஸீsவீஷீஸீ ஷிநீலீமீனீமீ-க்கு வந்துவிட்டாலும்கூட, தமிழ்நாடு அரசு மட்டும்தான் அதற்குரிய சாதக மற்றும் பாதகங்களை ஆராய்ந்து, வழங்குவதற்காக குழு ஒன்றை நியமித்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள மொத்த அரசு ஊழியர்கள் 12 இலட்சம் பேர். ஓய்வூதியம் பெறுவோர்கள் 7.42 இலட்சம் பேர். மொத்தமாக உள்ள இந்த 19.42 இலட்சம் குடும்பங்களுக்கு, அரசின் வரிவருவாயில் செலவிடப்படும் தொகை 70 சதவிகிதமாகும். தமிழ்நாட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்பட மொத்தமாக உள்ள 2 கோடி குடும்பங்களுக்கும் சேர்த்து மாநில அரசின் வரிவருவாயில் மக்கள் நலத் திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் செலவிடப்படும் தொகை 6 சதவிகிதம் மட்டுமே என்பதை அரசு ஊழியர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன். இந்த அளவுக்கு ஊதியம் மற்றும் பிற சலுகைகள் வழங்கியுள்ளதை கருத்திற்கொண்டு, மக்களின் நலன் கருதி அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு, பொறுப்புணர்வோடு கடமையாற்றுவார்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.
    சிறப்பான அரசு நிருவாகத்தை வழங்க வேண்டியது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட நமது அனைவரின் கடமை என்பதை உணர்ந்து, மாநில அரசின் நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு, கோரிக்கைகளை முன் நிறுத்தி அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிருவாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பவர்களுடன் துணை போகக் கூடாது என்று நான் வேண்டுகோளும் விடுக்கின்றேன். தற்போதுள்ள சூழ்நிலையில் எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும், எதை நிறைவேற்ற முடியாது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். நிதிநிலைக்குட்பட்டு நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளை, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அரசு என்றும் தயக்கம் காட்டாமல் செயல்படுத்தும் என்பதனையும் கடந்த ஓர் ஆண்டு காலமாக இந்த அரசு எடுத்த நல்ல பல நடவடிக்கைகள்மூலம் நீங்கள் அறிவீர்கள்.
    6-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி, 1-1-2006 அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை ஏற்றபின், 1-1-2016 அன்றைய மாதாந்திர சராசரி ஊதியம் மற்றும் 6-வது ஊதியக்குழு அமல்படுத்திய பின்பும், 7-வது ஊதியக்குழு அமல்படுத்திய பின்பும், ஏற்பட்டுள்ள சராசரி சம்பள உயர்வு எவ்வளவு என்பதை நான் குறிப்பாக சில பல உதாரணங்களை நம்முடைய சபைக்கு எடுத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
    இடைநிலை ஆசிரியர்கள். 6-வது ஊதியக்குழுவின்படி 1-1-2006 அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.17,800. 1-1-2016 சம்பள உயர்வுக்குப் பிறகு பெறும் மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.48,423. இந்த இடைப்பட்டக் காலத்தில் சராசரி சம்பள உயர்வு ரூ.30,623.
    தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். 6-வது ஊதியக் குழுவின் மூலமாக 2006-ல் பெற்ற சம்பளம் ரூ.30,450. இன்று, 7-வது ஊதியக் குழுவின் மூலமாக அவர்கள் பெற்று வருகின்ற சம்பளம் ரூ.63,638. சராசரியாக ஊதிய உயர்வு 6-வது ஊதியக்குழு ஊதியத்திற்கும்,
    7-வது ஊதியக்குழு ஊதியத்திற்கும் ரூ.52,360.
    பட்டதாரி ஆசிரியர்கள் 2006-ல் அன்று பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.30,550.
    7-வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வுக்கு முன் பெற்ற மாதாந்திர சராசரி ஊதியம் ரூ.63,683. இன்று 2016 சம்பள உயர்வுக்கு பின்னால் அவர்கள் பெற்று வருகின்ற சம்பளம் ரூ.83,085. இந்த வித்தியாசம் ரூ.52,535.
    உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2006-ல் அன்று பெற்ற சம்பளம் ரூ30,750. இன்று சம்பள உயர்வுக்கு பிறகு அவர்கள் மாதாந்திர ஊதியம் ரூ.83,635. சராசரி சம்பள உயர்வு 6-வது ஊதியத்திற்கும், 7-வது ஊதியத்திற்கும் இடைப்பட்டது ரூ.52,885.
    மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 6-வது ஊதியக்குழு மூலமாக அன்று பெற்ற சம்பளம் ரூ.36,950. இன்று அவர்கள் பெற்று வருகின்ற சம்பளம் 7-வது ஊதியக் குழுவிற்குப்பின் மாண்புமிகு அம்மா அவர்கள் உயர்த்தி தந்த சம்பளம் ரூ.1,00,685. சராசரி அளவு ரூ.63,735.
    இதைப்போலத்தான், தலைமைச் செயலகப் பணியாளர்கள், அமைச்சகப் பணியாளர்கள், இதரப் பணியாளர்களும் 7-வது ஊதியக் குழு மூலமாக அவர்களுக்கு உரிய சம்பளம், முறையான சம்பளம் எந்தவித குறைபாடும் இல்லாமல் பெற்று வருகின்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம் என்பதனை நான் இந்த சபையினுடைய கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
    அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையிலும் 1-1-2016 முதல் ஊதியத்தை அமல்படுத்தி நிலுவைத் தொகை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சார்ந்த 1,176 பேர் 21-2-2018 அன்று சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் ஊர்வலமாகச் சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் தலைமையகத்தை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டபோது அவர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அவ்வமைப்பினர் 24-2-2018 வரை அவர்களது மறியல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

    பின்னர் இவ்வமைப்பினர் மீண்டும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-5-2018 அன்று போராட்டம் நடத்த முற்பட்டபொழுது காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். மேலும் இப்போராட்டத்தில் பங்குபெறுவதற்காக மாநிலத்தின்பேல பகுதிகளிலிருந்து சென்னைக்கு வந்த ஜாக்டோஜியோ அமைப்பினர் 7,546 பேர் ஆங்காங்கே கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இவ்வமைப்பினர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் 150 பேர் நேற்று (11-6-2018) எழிலகம் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    தற்போது ஜாக்டோஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. மாயவன் தலைமையில் 108 பேர் எழிலகம் வளாகத்தில் காவரையற்ற உண்ணாவிரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நான் இங்கே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறியுள்ளேன். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்று நான் அன்போடு அவர்களைக் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

    ஊதியக் குழு முரண்பாடுகளைக் களையவேண்டுமென்ற கோரிக்கையினைப் பொறுத்தவரையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊதியக் குழு பரிந்துரைகள் தொடர்பான முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவதற்கா திரு. எம்.ஏ. சித்திக் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு நபர் குழு ஒன்றினை அமைத்து, அக்குழு 31-7-2018 க்குள் தனது அறிக்கையினை அளிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. இக்குழு பல்வேறு பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களது கோரிக்கைகளைப் பெற ஆரம்பித்துள்ளது. மேற்படி குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய முடிவுகளை அரசு எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரு. ஆதிஷேசய்யா குழு பற்றி இங்கே மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், காங்கிரஸ் எதிர்க்கட்சி கட்சித் தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். அரசின் வருவாய் செலவினத்தைக் குறைக்க வழிவகையை ஆராய அமைக்கப்பட்ட குழுதான் ஆதிஷேசய்யா குழு. இக்குழு அரசு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக அல்ல என்பதனை நான் இங்கு தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். அனைவரும் நாட்டு நலன் கருதி ஒற்றுமையோடு செயல்பட்டு நம்முடைய ஜாக்டோஜியோ அமைப்பின் மூலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தைக் கைவிட்டு, வரவிற்குள்தான் செலவு இருக்கவேண்டும் என்ற நிலைய எடுத்திருக்கின்ற தமிழக அரசினுடைய நிலைப்பாட்டுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
    ஏனென்று சொன்னால், நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கின்றபொழுது நம்முடைய ஆசிரியர் பெருமக்கள்தான் நம்முடைய அறிவுக் கண்ணை திறந்தார்கள். எப்படி வாழ்க்கை நடைமுறையை நீங்கள் நடத்த வேண்டும், பொது வாழ்க்கைக்குச் சென்றால் நீங்கள் எப்படி நாட்டு நலன் கருதி உழைக்க வேண்டுமென்றெல்லாம் அறிவுரைகளை, நல்லபல ஆலோசனைகளை ஆசிரியர் பெருமக்கள்தான் நமக்குப் புகட்டியிருக்கிறார்கள். வரவிற்குள்தான் செலவு இருக்கவேண்டும், பொது ஒழுக்கத்தை எவ்வாறெல்லாம் கடைபிடிக்க வேண்டும், பொதுநலன்களை எவ்வாறெல்லாம் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்ற நல்லபல அறிவுரைகளை சொல்லிக் கொடுத்தவர்களும் ஆசிரியர் பெருமக்கள்தான் என்பதனை இந்த நல்ல நேரத்தில் நினைவுகூர்ந்து, என்றைக்கும் அவர்கள்மீது நாங்கள் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கிறோம் என்பதனையும் தெரிவித்து, என்னுடைய இந்த விளக்கத்தினை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறினார்

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This