உடல் உறுப்பு தான முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என டாக்டர்கள் கோரிக்கை

Forums Inmathi News உடல் உறுப்பு தான முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என டாக்டர்கள் கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3806
  Nandha Kumaran
  Participant

  வெளிநாட்டு நோயாளிகளுக்கு அதிக அளவில் உடல் உறுப்பு தான முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

  தமிழ்நாட்டில் மூளைச் சாவுக்கு உள்ளான நபர்களிடம் இருந்து உறுப்புகளை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெளிநாட்டு பணக்கார நோயாளிகளே பெருமளவு பயன் பெற்றுள்ளனர்.

  உறுப்பு மாற்று- திசு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய அமைப்பின் இயக்குனர் பேராசிரியர். விமல் பண்டாரி இதை  உறுதிப் படுத்தியுள்ளார்.

  2017 ஆம் ஆண்டு இதய மாற்றுக்காக மூளைச் சாவு அடைந்தோரிடம் இருந்து பெறப்பட்ட இதயங்களில் 25  விழுக்காட்டையும், நுரையீரல்களில்  33 விழுக்காட்டையும் வெளிநாட்டினரே பெற்றுள்ளனர்.

  அதே சமயம் 5310 க்கும் மேற்பட்ட இந்திய நோயாளிகள், உறுப்புகளை பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியல் மூலம் காத்திருக்கின்றனர்.

  இம்முறைகேட்டிற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையே காரணம். தனியார் கார்ப்பரேட்  மருத்துவமனைகளும்,
  தமிழக  மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்தே இம்முறை கேட்டில் ஈடுபட்டுள்ளன.

  எனவே, இம்முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப் பட வேண்டும். தவறு செய்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்திட அம்மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

  தமிழகத்தில் நடைபெற்ற இம் முறைகேட்டை காரணம் காட்டி,உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை பெற்று வழங்கும் அதிகாரத்தை தமிழக அரசிடமிருந்து பறிக்க மத்திய அரசு முயல்கிறது. இது மருத்துவ சேவை வழங்குவதில் மாநில அரசின் அதிகாரத்தை,
  உரிமையை பறிக்கும் செயலாகும். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

  மூட்டைப் பூச்சியை காரணம் காட்டி வீட்டை கொளுத்தும் செயலை மத்திய அரசு செய்யக் கூடாது. வெளிநாட்டு நோயாளிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வதற்காக இந்தியாவை நோக்கி படையெடுப்பதை தடுக்க மத்திய அரசு உரிய சட்டங்களை கொண்டு வரவேண்டும்.

  மருத்துவச் சுற்றுலாவை ஊக்கப்படுத்துவது, மருத்துவ சேவையையே தொழிலாக மாற்றுவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்துவது, மருத்துவம் மூலம் அந்நியச்
  செலாவணியை ஈட்டுவது போன்ற மத்திய அரசின் கொள்கைகளே இம்முறை கேடுகளுக்கு அடிப்படைக் காரணம்.

  எனவே,மத்திய அரசு தனது மக்கள் விரோத மருத்துவக் கொள்கைகளை மாற்ற வேண்டும். தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் 195 நாடுகளின் பட்டியலில் இந்தியா 145 வது இடத்தில் உள்ளது.

  இது நமக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. நமது மக்களுக்கே தரமான சிகிச்சையை வழங்க மத்திய – மாநில அரசுகளால் முடியவில்லை.

  இந் நிலையில், மருத்துவச் சுற்றுலா மூலம் வெளிநாட்டு பணக்கார நோயாளிகள் பயனடையும் வகையில் கொள்கைகளை வகுத்திருப்பது சரியல்ல.

  மத்திய அரசின் தவறான கொள்கைகள் மூலம் ஏழை இந்தியர்களின் உறுப்புகளை, பணக்கார வெளிநாட்டினர் பெற வழி ஏற்படுத்தப்
  பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.

  எனவே ,உரிய சட்டங்களை கொண்டுவந்து வெளிநாட்டு நோயாளிகள் , தங்கு தடையின்றி இந்தியர்களின் உறுப்புகளை தானமாகப் பெறுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும்.

  தனது பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு,தமிழக அரசின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பை குறை கூறுவது நியாயமல்ல.அதன் உரிமையை பறிக்க முயல்வது சரியல்ல.

  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகத்தில் நிலவும் ஊழலை காரணம் காட்டி,தமிழக அரசின் உரிமையை பறிக்கும் செயலை ஏற்க முடியாது.

  பல குறைபாடுகள் இருந்தாலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. பிற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  எனவே,உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையான முறையிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் ,அதிக அளவில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இதன் மூலம் மட்டுமே,தமிழகத்தைச் சேர்ந்த ஏழை நோயாளிகள் அதிகம் பயனடைய முடியும் என சமத்துவக்கான டாக்டர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This