சட்டசபையில் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை -சேலம் இடையே அமைக்கப்படவுள்ள பசுமைவழி சாலை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே மக்கள் போராட்டம் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட விளக்கம் அளித்தார். அதில் இப்பகுதியில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும் எதிர்காலத்தில் இங்கு போக்குவரத்து நெரிசல் உண்டாவதைத் தடுக்கவுமே இத்திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் வனப்பகுதியில் அதிக பாதிப்பு ஏற்படாது. குறைந்த அளவு ஹெக்டேர் நிலமே கையகப்படுத்தப்படும். இதில் அகற்றப்படும் 10,000 மரங்களுக்கு பதிலாக 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மேலும் நில உரிமையாளர்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விட அதிக அளவில் தொகை வழங்கப்படும் என்று கூறினார்.