நிகர்நிலை பல்கலைகழகங்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Forums Inmathi News நிகர்நிலை பல்கலைகழகங்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3676

  நிகர்நிலை பல்கலைகழகங்களின் மருத்துவப் படிப்பு கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில் கூறியுள்ளார். அறிக்கையில் கூறியுள்ளதாவது:

  தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதுவரை ஆண்டுக்கு ரூ.13 லட்சம் மட்டுமே கல்விக்கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

  இந்தியாவில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எனப்படுபவை கல்வி ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், இப்போது அவை யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் மூக்கணாங்கயிறு இல்லாத காளைகளாக அட்டகாசம் செய்து வருகின்றன. மாணவர் சேர்க்கைக்கு முறையான விதிகள் இல்லாதது, இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லாதது, விருப்பம் போல கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தனி கல்வி சாம்ராஜ்யங்களாக செயல்பட்டு வருகின்றன. அதன்விளைவு தான் மருத்துவப்படிப்புக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு ரூ.22.5 லட்சம் வரை கட்டணம் வசூலித்து வருகின்றன. இவை தவிர வேறு பல பெயர்களில் சில லட்சங்களை பறித்துக் கொள்கின்றன. அவை கணக்கில் வராது.

  இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக மருத்துவக் கல்விக் கட்டணம் 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.50 லட்சம் வரை மிச்சமாகும். ஆனால், உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலக் கல்விக் கட்டணமே மிகவும் அதிகம் என்பது தான் பெரும்பான்மையான கல்வியாளர்களின் கருத்து ஆகும். தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையில் எந்தவிதமான கட்டமைப்பு சார்ந்த வித்தியாசங்கள் இல்லை. ஒரு காலத்தில் தனியார் கல்லூரிகளாக இருந்தவை தான், மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்காக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறின.இவை எப்படி, எதற்காக, யார் மூலம் இந்த தகுதியை பெற்றன என்பது மிக நீண்ட பின்னணியாகும்.

  ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டணத்திற்கும், நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களின் கல்விக்கட்டணத்திற்கும் இடையில் பெரும் வித்தியாசங்கள் உள்ளன. தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக் கல்விக்கட்டணமாக ரூ.2.85 லட்சம் முதல் ரூ 4 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும் ரூ.12.50 லட்சம் வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் 65% இடங்கள் அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகின்றன. அதன்படி பார்த்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சராசரிக் கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.6.22 லட்சம் முதல் ரூ. 6.97 லட்சம் என்ற அளவில் தான் உள்ளது. இது ஓரளவு நியாயமானதாகும்.

  அதேநேரத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கல்விக்கட்டணம் குறைந்தது ரூ.18 லட்சம் ஆகும். அதிகபட்சமாக ரூ. 22.50 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படும் வரை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக் கட்டணமாக ரூ.6 லட்சம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. இதுதவிர ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை நன்கொடையாக வசூலிக்கப்பட்டு வந்தது. நீட் தேர்வுக்குப் பிறகு மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கையில் எடுத்துக் கொண்டதால் நன்கொடை வசூலிப்பதை நிறுத்திவிட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அதை ஈடு செய்யும் வகையில் ரூ.6 லட்சமாக இருந்த ஆண்டு கல்விக் கட்டணத்தை ரூ.22.50 லட்சமாக உயர்த்திவிட்டன. ஒரே ஆண்டில் கல்விக்கட்டணத்தை 4 மடங்கு உயர்த்தியது எந்த வகையில் நியாயம் என்பதை மத்திய அரசோ, இந்திய மருத்துவக் குழுவோ கேட்கவில்லை. மாறாக, எந்த அடிப்படையும் இல்லாமல் மருத்துவக்கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளித்தன.

  நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழுவும், இந்திய மருத்துவக் குழுவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும். இந்திய மருத்துவக் குழு அனுமதித்தக் கட்டணங்களை பல்கலைக்கழக மானியக்குழு குறைக்காது. இதனால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணம் எந்த வகையிலும் குறையாது.அதனால், தமிழகத்திலுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படுவது தான் மிகவும் சரியானதாக இருக்கும். இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்தக் குழுவால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது போன்ற ஓரளவுக்காவது நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க முடியும்; இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

  எனவே, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவக் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். அத்துடன், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படுவது போன்ற இட ஒதுக்கீட்டையும் பின்பற்ற ஆணையிட வேண்டும்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This