காலா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அப்படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தொடர்ந்த வழக்கில், ‘படத்தை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட முடியாது. ஆனால், திரைப்படம் வெளியாகும் இடங்களில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையடுத்து, காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதல்வர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காலாவை படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல என்றும் காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்தது தனது போயஸ்கார்டன் இல்லத்தில் ஊடகத்தினரிடம் பேசிய ரஜினிகாந்த்,’’காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். கர்நாடகாவில் படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. வர்த்தகசபை காலாவிற்கு தடைவிதிப்பது சரியில்ல.
காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலாவை ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல. காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கூறியதில் என்ன தவறு உள்ளது. காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் காலா படத்தை எதிர்ப்பது சரியல்ல; இதை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.