தூத்துக்குடியில் நடந்ததென்ன – அறப்போர்

Forums Communities Fishermen தூத்துக்குடியில் நடந்ததென்ன – அறப்போர்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #3385
  TN Gopalan
  Participant

  Arappor – அறப்போர் இயக்கம்
  4 hrs ·
  தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய ஒரு நிகழ்வு. இது குறித்து நேரடி கள நிலவரத்தை தெரிந்து கொள்ள அறப்போர் குழு போராட்டம் செய்த தூத்துக்குடி கிராம மக்களை சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு, கலவரம் ஏற்பட்டதற்கு முழு காரணமும் அரசு நிர்வாகம் தான் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது, இந்த போராட்டத்தை ஜனநாயக வழியில் மிகவும் அமைதியாக நடத்திய கிராம மக்கள் அனைவருக்கும் அறப்போர் இயக்கம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

  100வது நாள் போராட்ட அறிவிப்பின் தீவிரத்தை தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பார்த்திருந்தாலே அரசுக்கு புரிந்திருக்கும். மக்கள் அதிக அளவில் திரள்வார்கள் என்று தெரிந்தும் அரசு மிகவும் அலட்சியமாக செயல்பட்டுள்ளது. காவல்துறையின் உளவுப்பிரிவு தூத்துக்குடியில் செயல்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

  திங்கட்கிழமை அலுவலகத்தில் இருக்க வேண்டிய ஆட்சியர் மக்கள் திரளாக ஆட்சியர் அலுவலகம் வருவதாக அறிவித்த பிறகும் பட்டா வழங்குவதற்காக அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றுவிடுகிறார்.

  தூத்துக்குடி சர்ச் மூலம் தான் கலவரம் தூண்டப்பட்டது என்று கூறப்படுபவை அனைத்தும் சமூக விரோதிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் விஷமத்தனமான வதந்தி.இந்த போராட்டம் கடந்து வந்த பாதையில் ஒவ்வொரு முறையும் இளைஞர்கள் கோபப்படும் போதும் அவர்களை அமைதிப்படுத்தி ஜனநாயகமான போராட்டத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு புரிய வைத்ததில் தேவாலயத்தின் பங்கு மிகவும் அதிகம். இதை அனைத்து கிராம மக்களும் ஒரே குரலாக கூறுகின்றனர்.

  இந்த 100வது நாள் பேரணிக்கு முக்கிய காரணமே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாருமே போராடும் மக்களை வந்து சந்திக்கவில்லை என்ற ஆதங்கம் தான். தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கிராம மக்கள் இணைந்து போராடும் போது அவர்களை சந்தித்து அவர்களின் பயத்தை போக்க வேண்டியது முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவையின் கடமை. அதை கூட செய்ய முடியாமல் வேறு என்ன முக்கியமான வேலை இவர்களுக்கு இருந்தது என்று தெரியவில்லை.

  பேரணி கட்டுக்கடங்காமல் போகவும் அதன் பிறகு துப்பாக்கி சூடு நடக்கவும் முழு காரணமும் காவல்துறை தான். அவர்கள் விதிமுறைப்படி போராட்டத்தை திட்டமிட்டு கையாண்டிருந்தால் இந்த கலவரமே நடக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு எந்தவிதமான விதிமுறைகளும் காவல்துறையால் பின்பற்றப்படவில்லை.

  தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல் இரண்டு நாட்கள் எந்த விதமான அவசர நிலைக்கும் தயாராக இல்லை என்பது மிகவும் கசப்பான உண்மை. கலவரத்தில் அடிபட்டு வந்தவர்களை பணம் கொடுத்தால் மட்டுமே ஸ்கேன் செய்வோம் என்று அடம்பிடித்திருக்கிறார்கள். சிறப்பு மருத்துவர் குழு இரண்டு நாட்களுக்கு பிறகு வந்த பிறகு தான் நிலைமை சீரடைந்து முறையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் இரண்டு நாட்கள் இதை செய்ய தவறியதால் ஒரு இளைஞருக்கு ஒரு காலை அப்புறப்படுத்தும் அளவிற்கு நிலைமை விபதீரமானது.

  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது கடமையை ஒழுங்காக செய்திருந்தால் இந்த போராட்டமே நடந்திருக்காது. இவர்கள் முறையாக ஆய்வுகள் நடத்தி சோதனை முடிவுகளை வெளிப்படையாக குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிட்டிருந்தால் இந்த பிரச்சனை ஆரம்ப கால கட்டத்திலேயே தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் தமிழகம் முழுவதும் இருக்கும் ஆலைகளின் தரத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தங்கள் நலத்தை பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

  ஸ்டெர்லைட் சுற்றி அமைந்துள்ள கிராம மக்களின் பயம் அதிகரிக்க காரணமே அதிகப்படியாக பரவும் கேன்சர் வியாதிதான். ஆனால் இந்த வியாதி ஏன் அந்த பகுதியில் அதிகமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்ன? அதற்கு என்ன காரணங்கள் இருக்க கூடும் என்ற எந்த விதமான ஆய்வுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

  இப்படியாக ஒவ்வொரு அரசு துறையும் ஆளும் மந்திரிகளும் தங்கள் கடமையை ஒழுங்காக செய்யாததால் இன்று 13 உயிர்களை துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுத்துவிட்டோம். நிவாரணம் கொடுத்து இந்த விவகாரத்தை மூடி மறைக்காமல் இனியாவது அரசாங்கம் தனது கடமையை ஒழுங்காக செய்ய வேண்டும். மக்கள் போராடினால் அவர்கள் தரப்பு நியாயத்தை காது கொடுத்து கேட்கக்கூடிய குறைந்த பட்ச நேர்மையாவது ஆட்சியாளர்களுக்கு வர வேண்டும்.

  இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தால் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இது போன்ற உயிர் இழப்புகள் மீண்டும் நடக்காமல் இருக்க நாம் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்த அறிக்கையை அறப்போர் இயக்கம் விரைவில் வெளியிடும்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This